அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில் மேற்கு மண்டல ஐஜி ஆய்வு

By KU BUREAU

தருமபுரி: தருமபுரி அருகே அடையாளம் தெரியாத 2 சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில் மேற்கு மண்டல ஐஜி நேற்று நேரில் ஆய்வு செய்தார். தருமபுரி அடுத்த வெத்தலக்காரன் பள்ளம் அருகே, புதிய சிப்காட் வளாகத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதியில், கடந்த 24-ம் தேதி காலை அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண் சடலங்கள் மீட்கப்பட்டன.

அவர்களை வேறு எங்கோ கொலை செய்து மர்ம நபர்கள் அப்பகுதியில் உடல்களை வீசிச் சென்றது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார், தமிழகம் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் 50 முதல் 60 வயதுக்கு உட்பட்ட மாயமானவர்கள் தொடர்பான விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், உடல்கள் மீட்கப்பட்ட இடத்தில் காவல்துறையின் மேற்கு மண்டல (கோவை) ஐஜி செந்தில்குமார் நேற்று நேரில் ஆய்வு செய்ததுடன், கொலையாளிகளைப் பிடிக்க பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். ஆய்வின்போது, சேலம் சரக டிஐஜி உமா, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE