திருநெல்வேலி: திருநெல்வேலியில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியொன்றில் அரிவாள் கத்தி மற்றும் இரும்பு ராடுகளுடன் வந்த மாணவருக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டு பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் 3 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்பள்ளியில் கடந்த சில மாதங்களுக்குமுன் 2 பிரிவு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவர்களை தாக்கியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து மாணவர்கள் இரு பிரிவாகவே செயல்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் தாக்கிய மாணவர்கள், தங்களை திருப்பி தாக்கக்கூடும் என்று கருதிய 2 மாணவர்கள் கடந்த சில நாட்களுக்குமுன் தங்களின் புத்தகப் பைகளில் அரிவாள் மற்றும் கத்தியை மறைத்து எடுத்து வந்துள்ளனர். இதுபோல் எதிர்தரப்பு மாணவர்கள் சிலர் தங்களது புத்தக பைகளில் இரும்பு கம்பிகளை கொண்டு வந்துள்ளனர்.
இதுகுறித்து தெரியவந்ததும் பள்ளி நிர்வாகம் அந்த மாணவர்களை அழைத்து விசாரித்து, அவர்களது புத்தக பைகளில் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்திருந்தது.
» வீட்டு வேலையாட்களுக்கு இருக்கும் மரியாதை கூட எனக்கில்லை - நடிகர் ஜெயம் ரவி வேதனை!
» கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதில் கணவர் உயிரிழப்பு: மனைவி கைது @ பாளையங்கோட்டை
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஆயுதங்களை எடுத்து வந்ததாக 9-ம் வகுப்பு மாணவர் ஒருவரை பள்ளியிலிருந்து நீக்கம் செய்து, பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அம்மாணவருக்கு மாற்றுச்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மேலும் 3 மாணவர்கள் ஒரு வார காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.