ஓய்வுபெற்ற டிஜிபி ஸ்ரீபால் மனைவியிடம் ரூ.90 ஆயிரம் பறித்த சைபர் மோசடி கும்பல்: மும்பை போலீஸ் பேசுவதாக மிரட்டல்

By KU BUREAU

சென்னை: மும்பை போலீஸ் பேசுவதாகக் கூறி, ஓய்வுபெற்ற டிஜிபியின் மனைவியிடம் சைபர் மோசடி கும்பல் ரூ.90 ஆயிரம் பறித்துள்ளது. மறைந்த டிஜிபி ஸ்ரீபாலின் மனைவி டாக்டர் கமலி(71). இவர், தி.நகர் கண்ணதாசன் தெருவில் வசித்து வருகிறார். கடந்த 24-ம் தேதி இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (டிராய்) இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து அவர், சட்ட விரோதமான செயல்களுக்கு உங்கள் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் 2 மணி நேரத்தில் உங்கள் செல்போன் எண்ணை பிளாக் செய்ய உள்ளோம் எனக் கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் மற்றொரு செல்போன் எண்ணில் இருந்து பேசிய நபர், மும்பையில் உள்ள அந்தேரி காவல் நிலையத்திலிருந்து பேசுகிறோம். உங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் கார்டு, பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது. அதற்காக ரூ.90 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தால், உங்களுடைய பண பரிவர்த்தனை விவரங்களை சரி பார்த்துவிட்டு மீண்டும் உங்கள் வங்கி கணக்கில் அந்த பணத்தை திருப்பி அனுப்பி விடுவோம் என தெரிவித்துள்ளனர்.

இதனால், பதற்றம் அடைந்த கமலி, அவர்கள் தெரிவித்தபடி ஜிபே மூலம் ரூ.90 ஆயிரம் அனுப்பி உள்ளார். பின்னர் இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகுதான் சைபர் கிரைம் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. உடனடியாக, இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் கமலி புகார் தெரிவித்தார். தி.நகர் காவல் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

டாக்டர் கமலியின் கணவர் ஸ்ரீபால் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியாவார். இவர் சென்னை காவல் ஆணையராகவும், டிஜிபியாகவும் பதவி வகித்துள்ளார். சென்னை காவல் ஆணையராக இவர் இருந்தபோதுதான் பிரபல கொலையாளி ஆட்டோ சங்கர் கைது செய்யப்பட்டார். மேலும், பாண்டிபஜாரில் துப்பாக்கியுடன் சண்டையிட்ட விடுதலைப்புலி அமைப்பின் முக்கிய நிர்வாகிகளையும் கைது செய்திருந்தார். ஓய்வுபெற்ற பின்னர் சென்னையில் 2014-ல் தமது 76-வது வயதில் காலமானார்.

அதிகாரியிடம் மோசடி: சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் தேபேந்திரன் நாராயண் கர் (60). வருமான வரித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 4-ம் தேதி ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. ‘உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது. இந்த லிங்க்கை கிளிக் செய்தால் என்ன பரிசு கிடைக்கும் என தெரியும்’ என கூறி அத்துடன் ஒரு லிங்க் இணைக்கப்பட்டிருந்தது.

அதை தேபேந்திரன் கிளிக் செய்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். வங்கி விவரம் உட்பட தகவல்களையும் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.35 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், அந்த மோசடி கும்பல் மேற்கு வங்க மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.

சைபர் க்ரைம் போலீஸார் அங்கு சென்று, மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரு சவுத்ரி (36), அவரது சகோதரர் பிஜு சவுத்ரி (31), கூட்டாளி சுரோனித் சென் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களை சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE