மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

By காமதேனு

சீர்காழி அருகே சாலையோர மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நொறுங்கிக்கிடக்கும் இருசக்கர வாகனம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கவின்(17), ஜஸ்வந்த்(20), காளிதாஸ்(24). இவர்கள் மூவரும் சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ராதாநல்லூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மின்கம்பத்தில் மோதிய இருசக்கர வாகனம் தூள் தூளாக சிதறியது. இந்த கோர விபத்தில் கவின் (17), ஜஸ்வந்த் (20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காளிதாஸ்(24) பலத்த காயங்களுடன் அங்கேயே விழுந்து கிடந்துள்ளார். காலையில் அந்தப் பக்கமாக சாலையில் சென்றவர்கள் வாகனம் விபத்துக்குள்ளாகி இருப்பதையும் மூன்று பேர் அங்கே விழுந்து கிடப்பதையும் கண்டு போலீஸாருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடந்த இடம்

அதையடுத்து அங்கு வந்த போலீஸார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளிதாஸை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸாரின் விசாரணையில் சின்னங்குடி பகுதியில் நடைபெற்று வரும் இரவு நேர கபடி போட்டிக்கு மூன்று பேரும் சென்றதாகவும், இன்று அதிகாலை சின்னங்குடி பகுதியில் இருந்து தங்களது சொந்த ஊரான திருமுல்லைவாசல் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE