மண்டபத்தில் தாய், மகள் எரித்துக் கொலை - இலங்கை அகதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

By கி.தனபாலன்

ராமநாதபுரம்: மண்டபத்தில் தாய், மகள் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இலங்கை அகதி ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொரு அகதிக்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து ராமநாதபுரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்தவர் காளியம்மாள் (56). இவரது கணவர் இறந்துவிட்டதால் தனது இளைய மகள் மணிமேகலை (35) என்பவருடன் மண்டபம் ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்தார். தனது மகளுக்கு திருமணம் செய்வதற்காக மண்டபம் உமையாள்புரத்தில் புதிய வீடு கட்டி வந்தார். அந்த வீட்டில் கட்டிடத் தொழிலாளிகளாக மண்டபம் ஏகேஎஸ் தோப்பில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் சசிக்குமார் (38), சுப்பிரமணியன் (50) ஆகியோர் வேலை பார்த்துள்ளனர்.

அப்போது சசிக்குமார், காளியம்மாள் மற்றும் மணிமேகலையுடன் பழகி வந்துள்ளார். அதனால் காளியம்மாள் ரயில்வே குடியிருப்பில் சேதமடைந்த வேலைகளை செய்ய அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மணிமேகலையின் திருமணத்திற்காக காளியம்மாள் பணம், நகைகள் வைத்துள்ளதை சசிக்குமார் நோட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் 6.12.2021 அன்று நள்ளிரவில் காளியம்மாள் வீட்டிற்குச் சசிக்குமார் சென்றுள்ளார். பின்னர் பின்பக்க கதவை திறந்து வீட்டிற்குள் சென்று, அங்கு தூங்கிக்கொண்டிருந்த காளியம்மாள் மற்றும் மணிமேகலையை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு, பீரோவில் இருந்த சேலைகளை அவர்கள் மீது போட்டு எரித்துள்ளார். அதன்பின் அவர்கள் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த பணம் ரூ.3.05 லட்சம் ஆகியவற்றை திருடிக் கொண்டு, தான் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுப்பிரமணியனுடன் நடந்ததை கூறியுள்ளார்.

அடுத்த நாள் இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது சுப்பிரமணியனுக்கு திருடிய பணத்திலிருந்து ரூ.2 ஆயிரம் மற்றும் வெள்ளிக் கொலுசை கொடுத்து திருவண்ணாமலைக்கு அனுப்பியுள்ளார்.

07.12.2021 அன்று காளியம்மாள் மருத்துவமனை வேலைக்கு செல்லாததாலும், மதுரையில் உள்ள மூத்த மகள் சண்முகப்பிரியா பலமுறை போன் செய்தும் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் நேராக தாயின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இருவரும் எரிந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் மண்டபம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சசிக்குமார், சுப்பிரமணியனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு ராமநாதபுரம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தமராஜ், புதன்கிழமை (செப்.25) அகதி சசிக்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அதை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும், அகதி சுப்பிரமணியனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் ஆஜரானார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE