கோத்தகிரி: கோடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட தினேஷின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு வழக்கு விசாரணை கடந்த 2017ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு சம்பந்தமாக இதுவரை செல்போன் உரையாடல்கள், முக்கிய சாட்சிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் இடம் சிபிசிஐடி போலீஸார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேபோல தொலைத்தொடர்பு எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட விசாரணையும் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கெங்கரை பகுதியில் கோடநாடு எஸ்டேட்டில் கணினி பொறியாளராக பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட தினேஷின் பெற்றோரிடத்தில் சிபிசிஐடி போலீஸார் குழுவில் உள்ள டிஎஸ்பி அண்ணாதுரை விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவத்தின் போது பல்வேறு உரையாடல்கள் நடைபெற்று உள்ளது.
அந்த சமயத்தில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்த தினேஷும் தற்கொலை செய்துள்ளார். அப்போது அவரது செல்போனுக்கு வந்த உரையாடல்கள் குறித்தும் தற்போது அந்த செல்போன் எண் மற்றும் செல்போன் தற்போது எங்கு உள்ளது என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
» ‘மனைவியை அபகரித்த தனிப்படை காவலர்’ - மதுரை காவல் ஆணையரிடம் ஆட்டோ ஓட்டுநர் புகார்
» மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை - கணக்கில் வராத பணம் சிக்கியது!