மேட்டூர்: மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தூக்கணாம்பட்டியில் மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வாகன பதிவுக்காக செல்வோரிடம் லஞ்சம் வாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் முருகன் தலைமையிலான குழுவினர், இன்று மதியம் மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, மோட்டார் வாகன ஆய்வாளர் மீனா குமாரிக்கு சொந்தமான சொகுசு கார், அலுவலக வளாக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணியாளர்களின் வாகனம் உள்ளிட்டவற்றிலும் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து, ஒவ்வொரு பணியாளரின் இருக்கை பகுதிகள், அலுவலக வளாகப்பகுதி, ஆவணங்கள் இருப்பு அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் அதிரடியாக சோதனை நடத்தினர். போலீஸாரை பார்த்ததும், அலுவலக வளாகத்தில் இருந்த பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், புரோக்கர்கள் அங்கிருந்து செல்ல முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் எந்த ஆவணமும், பணமும் கிடைக்காததால், அவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை வாங்கிவிட்டு அனுப்பி வைத்தனர். அதே சமயம் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப் பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு தொடங்கிய சோதனை மாலைக்கு பிறகும் நீடித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
» மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை: 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பு
» கரூரில் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 17 பேர் காயம்