மதுரை: விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகள் அளிக்கும் வாக்குமூலங்களில் சாட்சிகளின் சாதி, மதத்தை குறிப்பிட தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை அமர்வின் பதிவாளர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை உலகநேரியைச் சேர்ந்த கோகுல் அபிமன்யு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகள் வாக்குமூலத்தில் சாட்சி அளிப்பவரின் சாதி மற்றும் மதம் குறிப்பிடப்படுகிறது. இதனை விசாரணை நீதிமன்றம் ஒரு நடைமுறையாகவே கொண்டுள்ளது. இதனால் நீதிபதியும், வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்ட நபரின் சாதி மற்றும் மதத்தை அறிந்து கொள்கின்றனர். சாட்சி அளிக்கும் நபரின் சாதி மற்றும் மத அடையாளங்கள் இல்லாமலேயே வழக்கு விசாரணையை நடத்த முடியும்.
வழக்கு விசாரணைக்கும் சாதிக்கும், மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விசாரணை நீதிமன்றம் வாக்கு மூலம் பெறும்போது சாதி மற்றும் மத அடையாளத்தை குறிப்பிட வேண்டியதில்லை என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் விசாரணை நீதிமன்றங்களில் இந்த நடைமுறை தொடர்கிறது. எனவே, விசாரணை நீதிமன்றங்களில் சாட்சிகளிடம் வாக்கு மூலம் பெறும்போது, அவர்களின் சாதி மற்றும் மதத்தை குறிப்பிடத் தேவையில்லை என உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு, மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர், மதுரை அமர்வின் நீதி மற்றும் நிர்வாகப் பதிவாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 4-க்கு ஒத்திவைத்தது.
» மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை: 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பு
» கரூரில் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 17 பேர் காயம்