வண்டலூர் அருகே இரும்பு குடோனில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

By பெ.ஜேம்ஸ் குமார்

வண்டலூர்: வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் உள்ள ராமனுஜம் கல்லூரி அருகே, தூத்துக்குடியை சேர்ந்த ஜான்சன் (45) என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் உள்ளது. இங்கு இன்று மதியம் 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதற்குள் தீ மளமளவென பரவியது. பின்னர், விரைந்து அங்கு வந்த சிறுசேரி மற்றும் மறைமலை நகர் தீயணைப்புத் துறையினர், மின் இணைப்பை துண்டித்துவிட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எதிர்பாராத இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. இந்த தீ விபத்து காரணமாக, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், சில மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இந்த தீ விபத்து குறித்து குடோன் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கொளப்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE