கரூரில் நின்றுகொண்டிருந்த பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து: 17 பேர் காயம்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: மகாதானபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது மற்றொரு தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்தனர்.

கரூரில் இருந்து திருச்சி செல்லும் தனியார் பேருந்துகள் காலை நேரங்களில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு தறிகெட்ட வேகத்தில் முந்திச் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி பயணிகளையும் பொதுமக்களையும் அச்சமூட்டி வருகின்றன. இதனால் பல சமயங்களில் அந்தப் பேருந்துகள் விபத்துகளையும் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ண ராயபுரத்தை அடுத்த மகாதானபுரத்தில் இன்று (செப். 25ம் தேதி) காலை பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர், பணிக்குச் செல்வோர் என ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.

அப்போது கரூரில் இருந்து திருச்சி செல்லும் தனியார் பேருந்து ஒன்று மகாதானபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற மற்றொரு தனியார் பேருந்து ஏற்கனவே நின்றுக்கொண்டிருந்த பேருந்தை கடந்து முன்புறம் சென்று நிறுத்துவதற்காக வேகமாக வந்தது. அப்போது, ஏற்கனவே அங்கு நிறுத்தி பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த அந்த தனியார் பேருந்தின் பின் பகுதியில் மோதியது.

இதில், பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதனால் சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த மாணவ - மாணவியர் உள்ளிட்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதில், மோதிய பேருந்தின் ஓட்டுநர், பேருந்தின் முன் பகுதியில் நின்று பயணம் செய்து கொண்டிருந்த 11 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 17 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ்கள் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த ஏராளமான மாணவ - மாணவியர் உள்ளிட்ட பயணிகள் நல்வாய்ப்பாக, உயிர் தப்பினர். இது குறித்து லாலாபேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, தனியார் பேருந்துகளின் தறிகெட்ட வேகத்தையும் போட்டி போட்டுக் கொண்டு ஒருவரையொருவர் முந்திச் செல்ல முயற்சிப்பதையும் போக்குவரத்துத் துறையினரும் போலீஸாரும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE