தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

By காமதேனு

தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களின் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எரிந்தும், நொறுங்கியும் கிடக்கும் பேருந்து

தென்னாபிரிக்காவின் வடகிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக கபோரோன் நகரில் இருந்து ஒரு பேருந்தில் கிறிஸ்தவர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

அந்த பேருந்து

இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென் ஆப்பிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் அதிபர் சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE