6 வயது மாணவி பாலியல் வன்கொடுமை: பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள்!

By KU BUREAU

தெலங்கானா: கமாரெட்டி மாவட்டத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கடுமையாக தண்டிக்கக் கோரியும், பள்ளியின் உரிமத்தை ரத்து செய்யக் கோரியும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

கமாரெட்டி மாவட்டத்தின் ஜீவதன் பள்ளியில் 6 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் குறித்து திங்கள்கிழமை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் நாகராஜு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை கண்டித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர் சங்கத் தலைவர்கள் உட்பட போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களை அமைதிப்படுத்த முயன்றனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில், ​​பள்ளியை நோக்கி கற்கள் வீசப்பட்டதில் அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

பின்னர், இச்சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, போராட்டக்காரர்கள் உள்ளூர் காவல் நிலையம் நோக்கிச் சென்றனர். நிலைமை மேலும் மோசமடைந்ததால், கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினார்கள்.

இதுகுறித்து பேசிய காமரெட்டி காவல் கண்காணிப்பாளர் சிந்து ஷர்மா, “ இக்கலவரத்தில் நான்கு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். வன்முறையைத் தூண்டியவர்கள் மற்றும் பள்ளியில் சேதம் ஏற்படுத்திய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பள்ளியை சேதப்படுத்தியவர்கள் மற்றும் காவல்துறையினரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE