இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி மாணவி உயிரிழப்பு - நாகை கிராம மக்கள் மறியல்

By KU BUREAU

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த மேல இலுப்பூரைச் சேர்ந்தவர் ராஜா மகள் அஸ்வினி(16). திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், இதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும் தனது உறவினர் மகன் அபினேஷை ஏற்றிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்குப் புறப்பட்டார்.

கிராமத்து சாலையில் இருந்து குருக்கத்தி பகுதியில் திருவாரூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஏறியபோது, நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதி, அந்த இடத்திலேயே அஸ்வினி உயிரிழந்தார்.

பலத்த காயமடைந்த அபினேஷ், 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தகவலறிந்து வந்த அஸ்வினி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் குருக்கத்தி பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையாத நிலையில் வாகனங்களை அனுமதித்தும், அந்தப் பகுதியில் பேரிகார்டுகள் அமைக்காததுமே விபத்துக்கு காரணம் என்றும் குற்றம்சாட்டி மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து போலீஸார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.

அப்போது, இலுப்பூர், செருநல்லூர் ஊராட்சிகளுக்கு பேருந்து வசதி இல்லாததால், பள்ளிக்கு மாணவர்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்ல வேண்டியுள்ளதாகவும், 2 கிராமங்களுக்கும் பள்ளி வேளையில் பேருந்து இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE