மதுரை: ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுரைக்கு கூரியர் மூலம் 24 கிலோ கஞ்சா பார்சல் வந்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரை வக்கீல் புதுத் தெருவைச் சேர்ந்த விக்கி என்பவர் பெயருக்கு, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பொம்மை நிறுவன முகவரியில் இருந்து, மதுரையில் செயல்படும் கூரியர் நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் பார்சல் ஒன்று வந்தது.
பார்சலில் இருந்த முகவரியின் செல்போன் எண்ணுக்கு கூரியர் நிறுவன ஊழியர் தாஜ்முகமது தொடர்பு கொண்டார். எதிர்முனையில் பேசிய நபர், தனியாக ஓரிடத்துக்கு வந்து, பார்சலை கொடுக்குமாறு கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த கூரியர் நிறுவனத்தினர், மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து, போலீஸார் கூரியர் நிறுவனத்துக்குச் சென்று, குறிப்பிட்ட பார்சலை பிரித்துப் பார்த்தனர். அதில், 12 பாக்கெட்களில் 24 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், தலைமறைவான விக்கி என்பவரைத் தேடி வருகின்றனர்.