செங்கல்பட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டது: அனைத்து ரயில்களும் தாமதம்! பயணிகள் அவதி

By காமதேனு

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்களும், சென்னை கடற்கரை ரயிலும் தாமதமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரத்தில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு இரும்பு மூலக்கூறுகள், உலோக தகடுகள், இரும்பு கம்பிகள் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு, 38 பெட்டிகளுடன் விழுப்புரத்திலிருந்து கிளம்பியது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு 10:30 மணி அளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்து அடைந்தது.

செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பொழுது பரனூர் ரயில் நிலையத்திற்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் திடீரென தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தத்துடன் சரக்கு ரயில் தடம் புரண்டது. சுமார் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

இரும்பு பொருட்களை ஏற்றி வந்ததால் அதிக பாரத்துடன் இருந்த சரக்கு ரயில் தடம் புரண்டதால் பல்வேறு இடங்களில் தண்டவாளம் சேதம் அடைந்துள்ளது. தண்டவாளம் விரிசல் அடைந்தும் காணப்படுகிறது. சரக்கு ரயில் மட்டும் தடம் புரண்டதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் பகுதியில் இருந்து மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு ரயில் மீட்கும் பணி தற்போது துவங்கியுள்ளது. இந்த பணிகள் பணிகள் முடிய நாளை மாலை வரை ஆகலாம் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களில் செல்லக்கூடிய ரயில்களும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய ரயில்களும் காலதாமதமாக வந்தடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதிப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE