பாலியல் வன்கொடுமை புகாரில் ‘பிசியோதெரபிஸ்ட்’ கைது @ கோவை

By KU BUREAU

கோவை: கோவை மருதமலை ஐ.ஓ.பி காலனியைச் சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன்(68). பிசியோதெரபிஸ்ட். இவரது மனைவி குழந்தைகள் நல மருத்துவராக உள்ளார். அனந்தகிருஷ்ணன் 23 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் வடவள்ளி போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

போலீஸார் சரிவர விசாரிக்காததால், அந்த பெண் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், இந்த புகாரை விசாரிக்க போத்தனூர் சரக உதவி ஆணையர் கரிகால் பாரிசங்கர் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விசாரணையில் அனந்தகிருஷ்ணன், இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதையடுத்து, அனந்தகிருஷ்ணன் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மேற்குப்பகுதி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்தனர். குமுளி பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE