காட்பாடி அருகே மெக்கானிக் ஷெட்டில் திருட்டு கார்களை பதுக்கி விற்றவர் கைது!

By வ.செந்தில்குமார்

வேலூர்: காட்பாடி அருகேயுள்ள கார் மெக்கானிக் ஷெட்டில் பல்வேறு மாநிலங்களில் திருடப்பட்ட கார்களின் இன்ஜின் நம்பர்களை மாற்றி குறைந்த விலைக்கு விற்று வந்த பழைய குற்றவாளியை காட்பாடி காவல்துறையினர் கைது செய்தனர். அவரது கார் மெக்கானிக் ஷெட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 54 கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி - குடியாத்தம் சாலையில் வெங்கடேசபுரம் அருகே கார் மெக்கானிக் ஷெட் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளராக காட்பாடி காந்திநகரைச் சேர்ந்த தேவா என்ற தேவகுமார் (41) உள்ளார். இவரது கார் மெக்கானிக் ஷெட்டில் திருட்டு கார்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக காட்பாடி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டிஎஸ்பி பழனி தலைமையில் ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கார் ஷெட்டின் உரிமையாளரான தேவகுமார் ஏற்கெனவே பல்வேறு கார் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளி என்று தெரியவந்தது. இவர் மீது காட்பாடி, பேரணாம்பட்டு, மேல்பட்டி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்குகளை அவர் 2017-ம் ஆண்டுக்குள் முடித்து தற்போது எந்த வழக்கிலும் தொடர்பில்லாமல் உள்ளார்.

ஆனால், அவரது கார் ஷெட்டில் திருட்டு கார்கள் இருப்பதை உறுதி செய்த காவல் துறையினர் தேவகுமாரை இன்று (செப்.24) கைது செய்தனர். தொடர்ந்து, கார் ஷெட்டில் நடத்திய சோதனையில் மொத்தம் 54 கார்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அங்கிருந்த பல்வேறு கார்களின் ஏராளமான உதிரி பாகங்களையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘தேவகுமார் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருடப்பட்ட சொகுசு கார்களை கன்டெய்னர்களில் வாங்கி வந்து இன்ஜின், சேசிஸ் நம்பர்களை மாற்றி ரகசியமாக குறைந்த விலைக்கு விற்றுள்ளார். இதற்காக மிகவும் பழைமையான கார்களின் ஆர்.சி புத்தங்களை வைத்து திருடப்பட்ட கார்களின் இன்ஜின் மற்றும் சேசிஸ் நம்பர்களை மாற்றியுள்ளார். இதில், விற்பனை செய்ய முடியாத கார்களை உதிரி பாகங்களாக பிரித்து விற்றுள்ளார். இவரது கார் ஷெட்டுக்கு சென்றால் பல்வேறு கார் நிறுவனங்களின் உதிரி பாகங்கள் தாராளமாக கிடைக்கும்.

தற்போது, காவல்துறையினர் பறிமுதல் செய்த 54 கார்களில் 24 கார்கள் சர்வீஸ் செய்வதற்காக வந்துள்ளதாக தேவகுமார் கூறினார். அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. எனவே, அந்த கார்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் வந்தால் மட்டுமே அவற்றை எடுத்துச்செல்ல முடியும். அதுவரை அந்த கார்கள் நீதிமன்ற கட்டுப்பாட்டில்தான் இருக்கும். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 54 கார்களின் இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பர்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உதவியுடன் அடையாளம் காண உள்ளோம். பறிமுதல் செய்யப்பட்ட மொத்த கார்களின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும்’’ என்றனர்.

காவல் அதிகாரிகள் தொடர்பு: கைதாகியுள்ள தேவகுமார் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் முக்கிய காவல் துறை அதிகாரிகளிடம் தொடர்பில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த காவல்துறை அதிகாரிகள் வெளியூர் சென்று வருவதற்கு தேவகுமார் தான் அவரது ஷெட்டில் இருந்த கார்களை வழங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எனவே, தேவகுமாருடன் தொடர்பில் இருந்த காவல்துறை அதிகாரிகள் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE