செல்லூர் ராஜூ பெயரைச் சொல்லி ரூ.6.80 கோடி மோசடி - இரு பெண்கள் உட்பட மூவர் கைது

By என்.சன்னாசி

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பெயரைச் சொல்லி ரூ.6.80 கோடி மோசடியில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் அப்பகுதியில் கல் குவாரி நடத்துகிறார். இவருக்கு மதுரை நேரு நகரைச் சேர்ந்த சங்கரி என்பவருடன் கடந்த 2020ல் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், "மதுரையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் அவரது மனைவியை நன்றாக தெரியும். அவர்கள் மூலம் மணல் குவாரிக்கு உரிமம் வாங்கித் தருகிறேன்" என சரவணனுக்கு சங்கரி ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதை நம்பிய சரவணன் மதுரைக்கு வந்தார்.

மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் மாயத்தேவன், பிருந்தா, செல்வம், மகா, மாரி ஆகியார் முன்னிலையில் சங்கரியிடம் ரூ.25 லட்சம் முதலில் கொடுத்துள்ளார் சரவணன். அதைத் தொடர்ந்து பல்வேறு தவணையில் சுமார் ரூ.1 கோடி வரையிலும் சரவணனிடம் சங்கரி தரப்பினர் பணம் பெற்றுள்ளனர். ஆனபோதும் மணல் குவாரிக்கு அனுமதி வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக சரவணன் சங்கரியை தொடர்பு கொள்ள முயன்ற போது, சங்கரியின் போனை எடுத்துப் பேசிய பிருந்தா, சங்கரி மருத்துவ மனையில் இருப்பதாகவும் சில நாள் கழித்து பேசுவார் எனவும் கூறியுள்ளார். சில தினங்கள் கழித்து சங்கரியிடம் சரவணன் பேசியபோது, "பிருந்தா கொலை செய்யப்பட்டார். அவரது போனில் கடைசியாக நீங்கள் தான் பேசியதாக பதிவாகி இருக்கிறது. இந்த வழக்கில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமானால் இன்னும் கூடுதலாக பணம் தர வேண்டும்" என்று சொல்லி சரவணனை மிரட்டி கூடுதல் பணம் பறித்துள்ளார்.

இப்படி மொத்தம் ரூ.6.80 கோடி வரையிலும் மோசடி செய்த நிலையில், சுதாரித்துக்கொண்ட சரவணன் மதுரை காவல் ஆணையர் லோகநாதனிடம் புகார் அளித்தார். மத்திய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் கதிர்வேல், எஸ்ஐ-யான தியாகராசன் ஆகியோர் நடத்திய விசாரணையில், செல்லூர் ராஜுவின் பெயரைச் சொல்லி சங்கரி, சரவணனிடம் ரூ.6.80 கோடி வரை பெற்று மோசடி செய்திருப்பது உறுதுயானது. இதையடுத்து சங்கரி, மாயத்தேவன் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த செல்வம், மகா, மாரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, சங்கரி, மகாலட்சுமி, செல்வத்தை மட்டும் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மதுரை குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டபோது, "முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பெயரைச் சொல்லி சங்கரி, மாயத்தேவன், செல்வம், மகா, மாரி ஆகியார் பணம் பறித்து ஏமாற்றிள்ளனர். இதுகுறித்து மாயத்தேவன் உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து சங்கரி, மகாலட்சுமி, செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். மாயத்தேவன் உட்பட 2 பேரை தேடி வருகிறோம்" என்று போலீஸார் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE