கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்: கண்பார்வையை இழந்த 6-ம் வகுப்பு மாணவன்

By KU BUREAU

உத்தரப் பிரதேசம்: கௌசாம்பியில் ஆசிரியர் குச்சியால் தாக்கியதில் 6-ம் வகுப்பு மாணவனுக்கு இடது கண்ணில் பார்வை பறிபோனது. ஆதித்ய குஷ்வாஹா என்ற அந்த மாணவனுக்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்தும் கண்பார்வை கிடைக்கவில்லை.

நெவாரியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆதித்ய குஷ்வாஹா எனும் மாணவன் 6ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மார்ச் 9ம் தேதி, வெளியில் விளையாடும் சில மாணவர்களை அழைக்குமாறு ஆதித்ய குஷ்வாஹாவிடம், ஆசிரியர் சைலேந்திர திவாரி கூறியுள்ளார். அவர்கள் வராத காரணத்தால், ஆசிரியர் கோபத்தில் குச்சியால் அடித்துள்ளார். இதில் ஆதித்யாவுக்கு கண்ணில் காயம்பட்டது. காயம்பட்ட பிறகு சிறுவனை ஆசிரியர் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இதன்பின்னர் கண் சொட்டு மருந்து போட்டு வகுப்பில் படுக்க வைத்தார்கள். ஆனால் ஆதித்யாவால் இடது கண்ணால் பார்க்க முடியவில்லை.

இதுகுறித்து பேசிய ஆதித்யாவின் தாய் ஸ்ரீமதி, "ஆசிரியர் குச்சியை வீசியதில் என் மகனின் கண்ணில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. நாங்கள் காவல்துறைக்கு சென்றோம், ஆனால் அவர்கள் புகாரைப் பதிவு செய்யவில்லை. கல்வித் துறை தலையிட்ட பிறகு இந்த விஷயம் விசாரிக்கப்பட்டது. ஏப்ரல் 15 ஆம் தேதி கண் பரிசோதனையில், என் மகனுக்கு பார்வை சேதம் உறுதி செய்யப்பட்டது. சித்ரகூடில் உள்ள கண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட என் மகனுக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனால் இடது கண் பார்வையை மீட்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினர். இந்த விஷயத்தை மூடிமறைக்க ஆசிரியர் எங்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சத்தை வழங்கினார், ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்” என்றார்

குழந்தைகள் நலக் குழுவின் தலையீட்டைத் தொடர்ந்து, தற்போது ஆசிரியர் சைலேந்திர திவாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி கமலேந்திர குஷ்வாஹா கூறுகையில், “ கல்வி அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE