‘தேனி நர்சிங் மாணவியின் பாலியல் புகாரில் உண்மை இல்லை’ - மன அழுத்தத்தில் கூறியதாக போலீஸ் விளக்கம்

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: ''தேனி நர்சிங் மாணவி அளித்த பாலியல் புகாரில் உண்மைத்தன்மை இல்லை. அதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். மன அழுத்தம் காரணமாக அவர் இதுபோல் கூறியுள்ளார்'' என திண்டுக்கல் மாவட்ட எஸ்பி-யான அ.பிரதீப் தெரிவித்தார்.

தேனி நர்சிங் மாணவி ஒருவர், தான் ஆறு பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக நேற்று திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து திண்டுக்கல், தேனி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், மாணவி புகாரில் உண்மைத்தன்மை இல்லை என தெரியவந்தது. இருந்த போதிலும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் மாவட்ட எஸ்பி-யான அ.பிரதீப் கூறியதாவது: ''தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் படிக்கும் அந்த மாணவி நேற்று தனது வீட்டிலிருந்து கல்லூரி செல்வதற்காக பேருந்து மூலம் தேனி பழைய பேருந்து நிலையம் வந்து இறங்கியதாகவும் அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை காரில் கடத்தி தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், பின்னர் தன்னை திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் இறக்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

அவரளித்த புகார் தொடர்பாக திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவி மருத்துவ பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவரை சோதனை செய்ததில், அவர் கூறியது போல் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்பதும், அம்மாணவி மனஅழுத்தம் காரணமாக தவறான புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதை அந்த மாணவியே ஒப்புக்கொண்டுவிட்டார்.

மாணவி குடும்பப் பிரச்சினை காரணமாக உள்ள மனஅழுத்தத்தால் இதுபோன்று தவறான தகவலை தெரிவித்துள்ளார் என்பது உறுதியானது. இதையடுத்து அந்த மாணவிக்கு கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE