வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோண்டிய ராட்சத பள்ளத்தில் விழுந்து இருவர் உயிரிழந்த நிலையில், கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர் ஜெயசீலனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வேளச்சேரி பர்லாங் சாலையில் தனியார் கட்டுமான நிறுவனம் தோண்டிய 50 அடி பள்ளத்தில் விழுந்து நரேஷ், கட்டுமான நிறுவனத்தின் பணிதள பொறியாளரான ஜெயசீலன் ஆகிய இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு நாட்களுக்கு பிறகு இருவரது உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் நரேஷ் உடலை பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர். மேலும் உயிரிழந்த மற்றொரு தொழிலாளி ஜெயசீலன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து மருத்துவ சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக கிண்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனியார் கட்டுமான நிறுவனத்தின் மேற்பார்வையாளர் எழில், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சிவக்குமார் மற்றும் மணிகண்டனை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த ஜெயசீலனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பாக சம்மந்தப்பட்ட உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் பெண்களுக்கு இலவசம்... நடைமுறைக்கு வந்தது ‘மகாலட்சுமி’ திட்டம்!
சோகம்... `முண்டாசுப்பட்டி’ படப்புகழ் நடிகர் காலமானார்!
நடிகர் விஜயகாந்துக்கு மீண்டும் தீவிர சிகிச்சை... ரசிகர்கள் அதிர்ச்சி!