பெண்களின் ஆடைகளை அவிழ்க்கும் புகைப்படங்களை உருவாக்கும் ஏஐ செயலிகள் மற்றும் வலைதளங்களுக்கு அண்மையில் எழுந்திருக்கும் வரவேற்பு, டீப்ஃபேக் போட்டோக்கள் தொடர்பான கவலையை அதிகரித்துள்ளன.
டீப்ஃபேக் வீடியோக்கள் விவகாரம் இந்தியா உட்பட உலகநாடுகளை வெகுவாய் அலைக்கழித்து வருகிறது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவியோடு அச்சு அசலாய் உருவாக்கப்படும் போலி வீடியோக்களால், இந்தியாவில் பிரபல நடிகைகள் அவதிக்கு ஆளானார்கள்.
இந்த வரிசையில் தற்போது, பெண்களின் ஆடைகள் நீக்க உதவும் ஏஐ செயலிகளுக்கு இணையத்தில் எழுந்திருக்கும் வரவேற்பு, புதிய அபாயத்தை சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் எவரை வேண்டுமானாலும் ஆடைகள் இன்றி புகைப்படமாக புனைந்து உருவாக்க முடியும். இந்த செப்டம்பரில் மட்டும், சுமார் இரண்டரை கோடி மக்கள் ஆடைகளை அவிழ்க்கும் இணையதளங்களுக்கு முண்டியடித்துள்ளனர் என, சமூக வலைப்பின்னல் பகுப்பாய்வு நிறுவனமான கிராஃபிகா சுட்டிக்காட்டுகிறது.
ஆடை அவிழ்ப்பு மற்றும் நிர்வாண சேவைகளுக்காக பிரபல சமூக ஊடகங்கள் பொறுப்பின்றி விளம்பரம் செய்வதையும் கிராஃபிகா சுட்டிக்காட்டி உள்ளது. இதனால் பாலியல் வறட்சி கொண்ட சொற்ப தரப்பினருக்கு அப்பால், சமூகத்தில் பெரும் வட்டத்தை இந்த ஆபாச களஞ்சிய அச்சுறுத்தல்கள் சேர வாய்ப்பாகிறது. உதாரணத்துக்கு இந்த ஆண்டில் இதுவரை மட்டும், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆடைஅவிழ்ப்பு செயலிகளுக்கான இணைப்புகளின் எண்ணிக்கை 2,400 சதவீதத்துக்கும் மேலாக எகிறியுள்ளது.
பெரும்பாலும் சமூக ஊடகங்களில் இருந்தே களவாடப்படும் பிரபலங்கள் மற்றும் சாமானியர்களின் புகைப்படங்கள், ஆடை அவிழ்ப்பு செயலிகள் மூலம் ஆபாச வடிவெடுத்து, சமூகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வித்திடுகின்றன. நியூடிஃபை(Nudify) என்ற பெயரில் சமூக ஊடக குழுக்களில் இவை வைரலாகி வருகின்றன.
இந்த தளங்கள் மாதத்திற்கு 9.99 அமெரிக்க டாலர் கட்டணத்தில் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றன. இவற்றுக்கு அப்பால் ஒரு சில தளங்கள் இலவச சேவையையும் வழங்கி வருகின்றன. டீப்ஃபேக் மென்பொருள்களை தடையின்றியும் இலவசமாகவும், தவறான நோக்கத்தோடும் அணுகுவோர் அதிகரித்து வருவதால் தனியுரிமை கவலைகள் புதிய அச்சிறுத்தலாக புறப்பட இருக்கின்றன.
டீப்ஃபேக் மூலம் போலி ஆபாசப் படங்கள் உருவாக்குவதைத் தடைசெய்வதற்கான சட்டத்தை எந்த ஒரு நாடும் திறம்பட இன்னமும் அமல்படுத்த முடியவில்லை. நாளும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் ஆழம் மற்றும் வீச்சை உள்வாங்கிய பிறகே அவற்றுக்கு எதிரான தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடியும். எனினும் இருக்கும் சட்டங்களை விஸ்தரித்து, சிறார் தொடர்பான டீப்ஃபேக் புனைவுகளுக்கு அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் ஏற்கனவே தடை விதித்திருக்கின்றன.
கடந்த மாதம் வடக்கு கரோலினாவை சேர்ந்த குழந்தை மனநல மருத்துவர் ஒருவர், மருத்துவ ஆலோசனைக்காக தன்னிடம் வந்த குழந்தைகளின் புகைப்படங்களில் ஆடைகளை அவிழ்க்கும் செயலிகளைப் பயன்படுத்தியதற்காக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இப்படி ஏற்கனவே இருக்கும் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் தயாராக இருக்கின்றன.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் பெண்களுக்கு இலவசம்... நடைமுறைக்கு வந்தது ‘மகாலட்சுமி’ திட்டம்!
சோகம்... `முண்டாசுப்பட்டி’ படப்புகழ் நடிகர் காலமானார்!
நடிகர் விஜயகாந்துக்கு மீண்டும் தீவிர சிகிச்சை... ரசிகர்கள் அதிர்ச்சி!