பெங்களூருவில் சினிமா பாணியில் மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், 56 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் சுரேந்திர மூர்த்தி. இவர் கால் இல்லாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை சந்தித்துள்ளார். தொலைபேசி மூலம் அடிக்கடி பேச ஆரம்பித்த சுரேந்திர மூர்த்தி, இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் சுரேந்திர மூர்த்தியை காதலித்துள்ளார்.
இந்த நிலையில், வியாபாரம் செய்ய வேண்டும் என்று அந்த பெண்ணிடம், சுரேந்திர மூர்த்தி பணம் கேட்டுள்ளார். அவரது வார்த்தையை நம்பி தன்னிடமிருந்த தங்க நகை, பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.
ஆனால், சிறிது நாளிலேயே அந்த பணம், நகை பணம் போதாது என்று கூறியுள்ளார். இதனால் கடன் வாங்கி சுரேந்திர மூர்த்தியிடம் அந்த பெண் கொடுத்துள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த பெண்ணுடன் சுரேந்திர மூர்த்தி பாலியல் ரீதியாக உறவு கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பின், அந்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். திருமணம் செய்து கொள்ளச் சொல்லி இளம்பெண் கேட்ட போது, கால் இல்லாத பெண்ணை என் வீட்டில் ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார். இதனால் இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். கடன் வாங்கிக் கொடுத்த பணத்தைக் கேட்ட போது, அவருக்கு சுரேந்திர மூர்த்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் சுரேந்திர மூர்த்தி மீது இளம்பெண் நேற்று புகார் செய்துள்ளார். இதனை விசாரித்த போலீஸார், சுரேந்திர மூர்த்தி மீது ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம், மோசடி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இளம்பெண்ணிடம் சுரேந்திர மூர்த்தி மொத்தம் ரூ.56 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறுகையில், " நானும், என் அம்மாவும் சுயதொழில் செய்கிறோம். சுரேந்திர மூர்த்தி 2018-ம் ஆண்டு அறிமுகமானார். என்னைக் காதலிப்பதாக கூறினார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார், ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்றும், அதற்கு போதுமான பணமில்லை என்று கூறினார். உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள் என்றும், நிறுவனம் தொடங்கிய பிறகு திருப்பித் தருவதாக கூறினார்.
இதனால் என் எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணம், தங்க நகைகளை அவருக்குக் கொடுத்தேன். அது போதவில்லை என்றும், மேலும் பணம் கடன் வாங்கித் தரச்சொன்னார். அதன்படியும் வாங்கித் தந்தேன். ஆனால், அவர் நிறுவனம் தொடங்கவில்லை. மேலும், திருமண பேச்சு எடுத்தாலே, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தப்பித்துக் கொண்டார். கடைசியில் என்னைக் கொன்று விடுவதாக மிரட்ட ஆரம்பித்தார்.
அவரது வீட்டுக்குப் போய் நியாயம் கேட்ட போது, கால் இல்லாத பெண்ணை ஏற்கமாட்டோம் எனறு அவரது அப்பா கூறினார். இந்த நிலையில், ஜனவரி 31, 2024 அன்று திருமணம் செய்து கொள்வதாக சுரேந்திர மூர்த்தி கூறினார். நான் இதை நம்பினேன். ஆனால், அதன் பின் அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக சஞ்சயா நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தேன். அங்குள்ள இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறேன் என்றவர், இதன் பின் புகாரை கண்டு கொள்ளவில்லை. இதனால் கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் சுரேந்திர மூர்த்தி, அவரது தந்தை பரமேஷரப்பா, தாய் மீனாட்சிம்மா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளேன்" என்றார்.
மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பணம், நகை மட்டுமின்றி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சுரேந்திர மூர்த்தியை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!
வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?