கடன் பிரச்சினையில் குழந்தையுடன் தம்பதி தற்கொலை - திருப்பூரில் சோகம்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூரில் கடனை வாங்கியவர் தற்கொலை செய்து கொண்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்வர் நாகசுரேஷ் (40). இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர்களது மகள் முத்தீஸ்வரி (5). மூவரும் கடந்த ஓராண்டாக திருப்பூர் அணைக்காடு பகுதியில் வசித்து வந்தனர். நாகசுரேஷ் திருப்பூரில் தங்கியிருந்த வீட்டுக்காக ரூ.5 லட்சத்தை உறவினர் சூரியமூர்த்தி என்பவர் முன்னிலையில் வீட்டு உரிமையாளரிடம் முன் பணமாக கொடுத்துள்ளனர். அத்துடன் உறவினர் சூரியமூர்த்திக்கும் தனியாக ரூ.5 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளார் நாகசுரேஷ்.

இந்நிலையில், கடந்த வாரம் சூரியமூர்த்தி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, சூரியமூர்த்தி மனைவியிடம் கடனாக கொடுத்த பணத்தை நாகசுரேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. சூரியமூர்த்தி இறந்து விட்டதால், கொடுத்த பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என சூரியமூர்த்தியின் மனைவி தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதில், மன உளைச்சலுக்கு ஆளான நாக சுரேஷ் கடிதம் எழுதிவைத்துவிட்டு மனைவி மற்றும் மகளுடன் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாகசுரேஷ் தனது கடிதத்தில், தாங்கள் அணிந்துள்ள நகைகளை விற்று, தங்களது இறுதிச் சடங்கை செய்துவிடும்படி உருக்கமாக எழுதி வைத்துள்ளார். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE