புதிய போன் வாங்கியதற்கு பார்ட்டி கொடுக்க மறுத்த சிறுவன்: கத்தியால் குத்திக்கொன்ற நண்பர்கள் 

By KU BUREAU

புதுடெல்லி: ஷகர்பூர் பகுதியில் புதிய போன் வாங்கியதற்காக பார்ட்டி கொடுக்க மறுத்த 16 வயது சிறுவனை, 3 சிறுவர்கள் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஷகர்பூர் பகுதியில் நேற்று மாலை சச்சின் என்ற 16 வயது சிறுவன் தனது நண்பர் ஒருவருடன் புதிய போன் ஒன்றை வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் மூன்று சிறுவர்கள், புதிய போன் வாங்கியதைக் கொண்டாட சச்சினிடம் பார்ட்டி கேட்டுள்ளனர்.

இதற்கு சச்சின் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் சண்டையாக மாறியதை அடுத்து, ஒரு சிறுவன் சச்சினை கத்தியால் குத்தினார். அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் தெரிவித்த தகவல்களின்படி, "உள்ளூர்வாசிகள் சிறுவர்கள் ஒரு சிறுவனைக் கத்தியால் குத்தியதாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எல்என்ஜேபி மருத்துவமனையில் கொண்டுசெல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நாங்கள் சடலத்தை பரிசோதித்தபோது, ​​​​முதுகில் இரண்டுமுறை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன "என்று தெரிவித்தனர்.

புதிய செல்போனுக்காக பார்ட்டி கேட்ட தகராறே கத்திக்குத்துக்கு காரணம் என்று போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், குற்றம் நடந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும், உள்ளூர் புலனாய்வுப் பிரிவினரையும் பயன்படுத்தி மூன்று சிறார்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கான ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE