பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் 5 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பன்னாட்டு நிறுவனங்கள் நிறைந்துள்ள ஒயிட் பீல்டில் ‘ராமேஸ்வரம் கஃபே' என்ற ஓட்டலில் மார்ச் 1-ம் தேதி பட்டப்பகலில் அடுத்தடுத்த குண்டுகள் வெடித்தன. இதில் பத்து பேர் படுகாயமடைந்தனர். இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பெங்களூரு போலீஸார், தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக சபீர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஷிமோகாவை சேர்ந்த இருவர் சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மண்ணடி உள்பட 5 இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் உள்ள அப்துல்லா என்பவர் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது. அது போல் முத்தியால்பேட்டை சாலை விநாயகர் கோயில் தெருவில் உள்ள ஒருவரது வீட்டிலும் இந்த சோதனை நடைபெறுகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் பரபரப்பு நிலவி வருகிறது.