தேனி நர்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரமா? - போலீஸ் விசாரணை தீவிரம்

By KU BUREAU

திண்டுக்கல்: தேனி நர்சிங் கல்லூரி மாணவி யின் பாலியல் புகாரில் உண்மைத் தன்மை குறித்து திண்டுக்கல், தேனி மாவட்ட போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தமபாளையத்தை சேர்ந்த 22 வயது பெண், தேனியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு முன்பே இவரது குடும்பம் உத்தமபாளையத்துக்கு குடிபெயர்ந்துள்ளது. ஓணம் பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று கல்லூரிக்கு புறப்பட்டு சென்றவர், தாயாருக்கு போன் செய்து, தன்னை யாரோ பின் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

கல்லூரிக்கு தங்கள் பெண் வரவில்லை என்ற தகவல் கிடைத்ததையடுத்து, மாணவியின் தந்தை உத்தமபாளையம் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் தேனியில் தன்னை காரில் வைத்து ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, திண்டுக்கல் ரயில் நிலையப் பகுதியில் விட்டுச் சென்றுவிட்டதாக திண்டுக்கல் போலீஸாருக்கு தகவல் வந்தது.

அதிர்ச்சியடைந்த திண்டுக்கல் மகளிர் போலீஸார் மாணவியை உடனடியாக மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தேனி போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

தேனி காவல் ஆய்வாளர் ராம லட்சுமி, திண்டுக்கல் காவல் ஆய்வாளர் முருகேசுவரி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசா ரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. அ.பிரதீப், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அம்மாணவியிடம் விசாரணை நடத்தினார். விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு எஸ்.பி. எந்த தகவலும் தெரிவிக்க வில்லை.

மாணவியின் புகார் குறித்து விசாரிக்க உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு திண்டுக்கல் ரயில்நிலைய பகுதி, தேனி பேருந்து நிலைய பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ய உத்தரவிடப்பட்டது. மாணவி அணிருந்திருந்த ஆடைகள் ஆய்வுக்குட் படுத்தப்பட்டன.

இந்த ஆய்வு குறித்து போலீஸார் கூறியது: திண்டுக்கல் ரயில்நிலைய பகுதியில் மாணவியின் பை கிடந்துள்ளது. சிசிடிவி காட்சியில் மாணவி எந்தவித சலனமும் இன்றி சாதாரணமாக நடந்து செல்வது தெரிய வந்தது.

பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் இவரை காரில் வந்து இறக்கிவிட்டதாக கூறப்பட்டநிலையில், சிசிடிவியில் அவர் சொன்னது போன்று எந்த வாகனமும் பதிவாகவில்லை.

இதேபோல் தேனி பேருந்து நிலைய பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததிலும் எந்தவித சந்தேகப்படும்படியான காட்சிகளும் பதிவாகவில்லை. மாணவியின் புகாரின் உண்மைத் தன்மை சந்தேகத்துக்குரியதாக உள்ளதாகத் தெரிகிறது. முழு உண்மை வெளிவரும் வரை யில் தீவிர விசாரணை நடக்கும். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். இந்நிலையில், திண்டுக்கல் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து, வழக்கை தேனி மாவட்டத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE