கஞ்சா விற்ற பணத் தகராறில் இளைஞர் கொலை - வனப் பகுதியில் உடல் புதைப்பு

By பெ.ஜேம்ஸ் குமார்

கேளம்பாக்கம்: விருதுநகர் மாவட்டம் தம்பிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜித் (22), இவர் கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய செங்கண்மால் பகுதியில் உள்ள வடிவேலுக்கு சொந்தமான கார் டிங்கரிங் ஷெட்டில், கடந்த 5 மாதமாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், இவர் கடந்த 18ம் தேதி மாலை 5 மணியளவில் கார் டிங்கரிங் கடையில் இருந்து கழிவறை செல்வதாக வெளியே சென்றார். மீண்டும் வரவில்லை. கடை உரிமையாளர் வடிவேல் போன் செய்தபோது போன் சுவிச் ஆப்பில் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து, அப்துல் மஜித் கடைக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வடிவேல், அப்துல் மஜித் காணவில்லை என கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

அப்துல் மஜித் செல்போன் எண்ணை வைத்து, கடைசியாக அவரை தொடர்பு கொண்டவர்களின் பட்டியலை போலீஸார் சேகரித்தனர். இதையடுத்து செல்போன் எண்ணில் பேசியவர்கள் மற்றும் அப்துல் மஜித் பைக் வைத்திருந்த நபர் என அதில் தொடர்புடைய 8 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், தையூர் பகுதியை சேர்ந்த மோகன் (20), சகாயராஜ் (20), விமல்ராஜ் (20), ராகுல் (24), சேட்டு (23), ஸ்ரீகாந்த் (20), அபிலேஷ் (22), ரூபன் (18) என்பது தெரிந்தது. இதில் அப்துல் மஜித்தை செல்போன் மூலம் மேற்கண்ட நண்பர்கள் மது அருந்த அழைத்துள்ளனர். அப்பகுதி விளையாட்டு மைதானத்தில் அப்துல் மஜித் மற்றும் நண்பர்கள் 8 பேரும் மது அருந்தியுள்ளனர்.

ஸ்ரீகாந்த் என்பவரிடம் வாங்கிய ரூ.10 ஆயிரத்தை திருப்பி கேட்கும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் ஸ்ரீகாந்தின் தாயாரை ஆபசனமாக திட்டியதால், ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் சேர்ந்து அப்துல் மஜீத்தை குடிபோதையில் தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த அப்துல் மஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேறு வழியின்றி இதனை மறைக்க உடனே, தையூர்-கயார் சாலையில் உள்ள வனப் பகுதியில் குழிதோண்டி புதைத்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இந்த கொலையில் சம்மந்தப்பட்ட இரண்டு குற்றவாலியை போலீஸார் வனப் பகுதிக்கு அழைத்து சென்று புதைக்கப் பட்ட இடத்தை காண்பிக்க கூறினர். அவர்கள் காண்பிக்கப்பட்ட இடத்தை திருப்போரூர் வட்டாட்சியர் வெங்கட் ரமணன், பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திக்கேயன், கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. சடலம் அழுகிய நிலையில் இருந்தது. இறந்த அப்துல் மஜித் தந்தை அபுதாஹிர் வரவழைக்கப்பட்டு அடையாளம் கேட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் அங்கயற்கண்ணி தலைமையிலாம மருத்துவக் குழுவினர் வரவழைக்கப் பட்டு சடலம் தோண்டிய இடத்திலேயே வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மேற்கண்ட 8 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மோகன், சகாயராஜ், விமல்ராஜ் ஆகியோர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE