மகாராஷ்டிரா: ஜபல்பூர்-மும்பை கரிப் ரத் விரைவு ரயிலின் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாம்பு ஒன்று இருந்ததால் பயணிகளிடையே பெரும் பீதி ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் எக்ஸ்பிரஸ் ரயில் ஜபல்பூரில் இருந்து மும்பை கரிப் ரத்க்கு சென்று கொண்டிருந்த போது, ஜி3 பெட்டியின் மேல் பெர்த்தில்(23) பாம்பு இருந்தது தெரியவந்தது. இரும்பு கைப்பிடியில் பாம்பு தொங்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. லக்கேஜ்கள் நிரம்பியிருந்த அந்த பெர்த்தில் நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் அமர்ந்திருக்கவில்லை.
இதனையடுத்து பயணிகள் எச்சரிக்கை செய்ததை அடுத்து, ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையை சமாளித்து பயணிகளை காப்பாற்றினர். பயணிகள் உடனடியாக வேறு பெட்டிக்கு மாற்றப்பட்டனர். அதன் பின்னர், பாம்பு இருந்த பெட்டி பிரிக்கப்பட்டு, ஜபல்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மும்பையில் இருந்து 104 கிமீ தொலைவில் உள்ள மகாராஷ்டிராவின் கசாரா ரயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மேற்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷித் ஸ்ரீவஸ்தவா, “இந்த சம்பவம் குறித்து கண்காணிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது. ரயில்வே இதுபோன்ற விஷயங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளும்” என்று அவர் கூறினார்.