உத்தரப் பிரதேசம்: பாக்பத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை குரங்குகள் கூட்டம் தடுத்து நிறுத்திய சம்பவம் ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.
பாக்பத்தில் யுகேஜி மாணவி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் அச்சிறுமியை ஆளில்லாத ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவர் தனது ஆடைகளை கழற்றி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால், அப்போது குரங்குகளின் கூட்டம் அந்த நபரை ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ளது, இதனால் அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து ஓடிவந்த சிறுமி, அங்கே நடந்ததை தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்துப் பேசிய சிறுமியின் தந்தை, “வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளில் அந்த நபர் எனது மகளுடன் ஒரு குறுகிய பாதையில் நடந்து செல்வதைக் காண முடிந்தது. அவர் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அந்த நபர் என் குழந்தையை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். குரங்குகள் தலையிடாமல் இருந்திருந்தால் என் மகள் இந்நேரம் இறந்து போயிருப்பாள்” என்று அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக பிஎன்எஸ் பிரிவுகள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாக்பத் வட்ட காவல்துறை அதிகாரி ஹரிஷ் படோரியா தெரிவித்துள்ளார்.
» இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க: நாட்டு மக்களுக்கு உறுதி!
» சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இல்லை: காவல்துறை இணை ஆணையர் விளக்கம்