சென்னை: சீசிங் ராஜாவுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை என தெற்கு இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டர் குறித்து காவல் தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பலரும் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல ரவுடி சீசிங் ராஜாவுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், அவர் தேடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் சீசிங் ராஜா இன்று காலை சென்னை அக்கரை அருகே என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்
இந்த என்கவுன்டர் குறித்து காவல் தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அதில், “ஆந்திரவின் கடப்பா அருகே உள்ள ராஜம்பேட்டை பகுதியில் சீசிங் ராஜாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து வேளச்சேரி போலீஸிடம் இரவு ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்து விசாரித்துவிட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ய கேட்ட போது, நான் கூட்டி போய் காட்டுகிறேன் என சீசிங் ராஜா சொல்லியிருக்கிறார்.
முதலில் இரண்டு இடம் காட்டினார். அந்த இடத்தில் இல்லை. மூன்றாவது ஒரு இடத்தை காட்டும் போது ஒரு நாட்டுத்துப்பாக்கி அந்த இடத்தில் இருக்கிறது. அதை எடுத்துகொடுப்பது போல செய்கை செய்துவிட்டு போலீஸாரை நோக்கி இரண்டு ரவுண்டு சுட்டார். இது அதிர்ஷ்டவசமாக இன்ஸ்பெக்டர்கள் மீது படவில்லை. வண்டியின் மீதுதான் குண்டுகள் பட்டுள்ளது.
» துறையூரை தொடர்ந்து திருச்சியில் சத்துணவு முட்டை பயன்படுத்திய உணவகத்துக்கு சீல்
» திருவாரூரில் ஒரே நாளில் 16 கஞ்சா வழக்குகள் பதிவு: 24 பேர் கைது
இதனால் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் தற்காப்புக்காக வேறு வழியில்லாமல் அவரை நோக்கி இரண்டு ரவுண்டு சுடுகிறார். இதில் காயமடைந்த சீசிங் ராஜா மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 39 வழக்குகள் உள்ளது. இவரை மூன்று மாதத்திற்கு முன்பாக தேடப்படும் குற்றவாளியாக மாஜிஸ்திரேட்டு அறிவித்தார். இவர் மீது 10 வாரண்ட் பெண்டிங்க் உள்ளது, தலைமறைவாகவே இருந்து வந்தார். ஆம்ஸ்ட்ராங்க் வழக்கிற்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. வேளச்சேயில் துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கில் கைது செய்யும் போதுதான் இந்த மாதிரி நடந்துள்ளது. இது முழுக்க முழுக்க பாதுகாப்புக்காக நடந்த என்கவுன்டர்தான்” என்று அவர் கூறினார்.