சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி - அனுப்பம்பட்டு இடையே ரயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சிக்னல் மாற்றும் கருவியின் போல்டு, நட்டுகள் கழற்றப்பட்டிருந்தது. இதை ரயில் தண்டவாளத்தில் சல்லி கற்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் கண்டார்.
இது தொடர்பாக நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, ரயில் தண்டவாள பராமரிப்பாளர், பொறியாளர்களுக்கு நிலைய மேலாளர் தகவல் கொடுத்தார். இதன்பேரில், அவர்கள் அங்கு விரைந்து வந்து, ரயில் தண்டவாளத்தில் போல்டு, நட்டுகள் கழற்றப்பட்ட இடங்களில், அதை மீண்டும் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ரயில்வே போலீஸார் நேற்றுதினம் காலை அங்குவிரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
ரயிலை கவிழ்க்க வேண்டும்என்ற நோக்கில் இந்த போல்டு,நட்டுகளை மர்மநபர்கள் கழற்றி இருப்பார்களா என்றகோணத்தில் ரயில்வே போலீஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையில், இந்த சம்பவத்தில், மொத்தம் 13 நட்டுகள், 6 போல்டுகள், இரண்டு காப்புகள் மாயமாகி இருப்பதாக ரயில் நிலைய மேலாளர் புகார் கொடுத்துள்ளார்.