துறையூரை தொடர்ந்து திருச்சியில் சத்துணவு முட்டை பயன்படுத்திய உணவகத்துக்கு சீல்

By KU BUREAU

திருச்சி: துறையூர் உணவகத்தில் சத்துணவு முட்டை பயன்படுத்திய விவகாரத்தில் 2 பேர் கைதான நிலையில், திருச்சி எடமலைப்பட்டிபுதூரிலும் உணவகத்தில் சத்துணவு முட்டைகள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், உணவகமும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்எம்எஸ் காலனியில் உள்ளஉணவகத்தில் சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று முன்தினம் அந்த உணவகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 5 சத்துணவு முட்டைகள் இருப்பதைக் கண்டனர்.

இதுகுறித்து உணவகத்தை நடத்தி வரும் ஜன்னத்துல் குப்ராவிடம்(60) விசாரித்தபோது, அவரதுஅக்கா சல்மா(67), பக்கத்து தெருவில் வசிக்கும் சத்துணவு அமைப்பாளரான சத்யா(44) என்பவரிடம் இருந்து 30 முட்டைகள் ரூ.110 வீதம் 60 முட்டைகள் வாங்கிக் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், சத்யா வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது, முட்டை வியாபாரியான அவரது கணவர் ரகுராமன்(43), அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டைகளை விநியோகம் செய்வதும், அதில் சில முட்டைகளை உணவகத்துக்கு விற்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, உணவகத்தில் இருந்து 5 முட்டைகள், சத்யா வீட்டில் இருந்து 900 முட்டைகளைப் பறிமுதல் செய்து உணவகத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் சத்யா, ரகுராமன், உணவக உரிமையாளர் ஜன்னத்துல் குப்ரா, அவரது அக்கா சல்மாஆகிய 4 பேரையும் எடமலைப்பட்டிபுதூர் போலீஸில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக எடமலைப்பட்டிபுதூர் குற்றப் பிரிவு போலீஸ்இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE