திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில், கஞ்சாவுக்கு எதிரான போலீஸாரின் அதிரடி சோதனையில், ஒரே நாளில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என போலீஸாருக்கு எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில், போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நேற்று காலை முதல் கஞ்சாவுக்கு எதிரான தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், கஞ்சா விற்பனையில் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் சோதனையிடப்பட்டது.
இந்த சோதனையின் அடிப்படையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் திருவாரூர் நகரம், தாலுகா, கூத்தாநல்லூர், வலங்கைமான், பேரளம், முத்துப்பேட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, ஆலிவலம் உள்ளிட்ட காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
» வீணான ரச்சின் ரவீந்திராவின் அபார ஆட்டம்: முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி | SL vs NZ
» ’தேவரா’ நிகழ்ச்சி ரத்து; ஹோட்டலை நொறுக்கிய ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள்!
இதையடுத்து, விரைவாகவும் சிறப்பாகவும் செயல்பட்ட அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டினார்.
மேலும், கஞ்சா விற்பனை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.