திருவண்ணாமலை: ஆரணி புறவழிச்சாலையில் அடையாள தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அரியப்பாடி கிராமம் கோகுல் நகரில் வசித்தவர் மணி மகன் சரண்ராஜ் (21) மற்றும் கணபதி நகரில் வசித்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ராஜேஷ் (22). மேலும் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்தவர் ரமேஷ் மகன் மணிகண்டன் (21). நண்பர்களான மூவரும், ஆரணியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் நேற்று (செப்டம்பர் 21-ம் தேதி) இரவு திரைப்படம் பார்த்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர்.
முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்த மண்கண்டனை விடுவதற்காக சென்றுள்ளனர். வழியில் தேனீர் கடையில் டீ குடித்துவிட்டு பயணித்தனர். ஆரணி புறவழிச்சாலையில் நள்ளிரவு 11.45 மணியளவில் சென்றபோது, இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் சரண்ராஜ், ராஜேஷ், மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 3 இளைஞர்களும் உயிரிழந்தது குறித்து, அவ்வழியாக சென்றவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
» ராமேசுவரம் அருகே கடலுக்கு அடியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்
» மீட்டர் கட்டணம் உயர்வு கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் செப்.24-ல் கோட்டை நோக்கி பேரணி
அதன்பேரில், ஆரணி கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று 3 இளைஞர்களின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணி புறவழிச்சாலை மற்றும் பிரதான சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விபத்துக்கு காரணமான வாகனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.