புதுச்சேரி - மணப்பட்டு கிராமத்தில் சமூகவெளி காட்டைச் சீரழிக்கும் சமூக விரோதிகள்!

By அ.முன்னடியான்

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்த மணப்பட்டு கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான சமூகவெளி காடு உள்ளது. 48 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த காட்டில் 34 ஆயிரம் முந்திரி மரங்கள், 1,500 நெல்லி மரங்கள், 1,500 நாவல் மரங்கள், 15 ஆயிரம் பனை மரங்கள் மற்றும் சவுக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன.

ஓராண்டுக்கு முன்பு அத்தி, கொன்றை, அரசம், பாதாம் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது மேலும் 25 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மயில், காட்டுப்பூனை, புனுகுப்பூனை, கீரிப்பிள்ளை, பாம்பு, உடும்பு உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாகவும் இந்த சமூகவெளி காடு உள்ளது.

நாள்தோறும் இங்கு 5-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, இங்குள்ள வன விலங்குகளுக்கு பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் வைப்பது போன்ற பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமூகவெளி காட்டை அடர்வனக் காடாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே வளர்ந்துள்ள மரங்களால் இந்தப் பகுதி பசுமை சூழ்ந்த பகுதியாக காட்சியளிக்கிறது.

அதே நேரத்தில், வனத்துறைக்கு உட்பட்ட இந்த சமூகவெளி காடு பாதுகாப்பு ஏதும் இன்றி உள்ளது. இதனால் மதுப் பிரியர்கள், சமூக விரோதிகளின் கூடாரமாக இப்பகுதி மாறியுள்ளது. இங்கு வரும் நபர்களால் இங்குள்ள மரங்கள், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழலும் உருவாகி வருகிறது.

மணப்பட்டு, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சமூகவெளி காட்டுப் பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் ஊழியர்கள்

இது குறித்து மணப்பட்டுப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “புதுச்சேரியில் குறிப்பிடும்படியான பசுமை சூழ்ந்த இயற்கை வனம் எதுவும் இல்லை. இருப்பினும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் தானாக வளர்ந்த மரங்களும், வனத்துறையால் நடப்பட்ட பல்வேறு வகையான மரங்களும் பராமரிக்கப்பட்டு இந்த சமூகவெளி காடு உருவாக்கப்பட்டுள்ளது.

நல்ல முறையில் பேணப்பட்டு வந்தாலும், இதனை பாதுகாக்க போதிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை. சமூக விரோதிகள் இந்த வனத்துக்குள் அமர்ந்து மது அருந்துவது, மது அருந்திவிட்டு மது பாட்டில்களை உடைத்தெறிவது, பிளாஸ்டிக் பொருட்களை தான்தோன்றித் தனமாக வீசி விட்டு செல்வது போன்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. மேலும் சிகரெட், பீடி குடித்துவிட்டு வீசுவது, மரக்கிளைகளை உடைத்து சேதப்படுத்துவது போன்றவற்றை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதுமட்டு மின்றி இந்த வனப்பகுதியை விருப்பத்தாகாத வேறு செயல்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே இந்தக் காட்டில் கொலைச் சம்பவம் நடந்துள்ளது, காடு தீப்பிடித்தும் எரிந்துள்ளது. மதுப் பிரியர்கள், சமூக விரோதிகளின் புகலிடமாக இந்த காடு மாறி விட்டதால், இதை ஒட்டியுள்ள மணப்பட்டு கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வனத் துறை உரிய நடவடிக்கை எடுத்து, இந்தப் பகுதியின் அமைதியை மீட்டெடுக்க வேண்டும். அத்துடன் இந்த காட்டுப்பகுதியை தொடர்ந்து முறையாக பேணி பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE