தாய்லாந்து, கம்போடியாவில் வேலையா? - மீட்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் இளைஞர் எச்சரிக்கை

By KU BUREAU

தூத்துக்குடி: தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் வேலைக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என, தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்கு சென்று மாயமாகி, பின்னர் மீட்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் இளைஞர் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் அருகே வெள்ளூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (32). இவருக்கு திருமணமாகி சுந்தரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஏஜென்ட்கள் மூலம் முத்துக்குமார் அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். கடந்த ஜூலை 21-ம் தேதி தாய்லாந்து நாட்டுக்கு வேலைக்குச் சென்றார். அந்த நாட்டின் பாங்காங் விமான நிலையம் சென்ற முத்துக்குமார், அங்கிருந்து வாட்ஸ் அப் மூலம் தனது மனைவி சுந்தரியிடம் பேசியுள்ளார். அதன் பின்னர் அவர் மாயமானார்.

முத்துக்குமாரை மீட்டுத் தரக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அவரது மனைவி சுந்தரி மனு அளித்தார். முத்துக்குமாரை மீட்பதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. பல்வேறு பிரச்சினைகளுக்கு பின்னர் தாய்லாந்து நாட்டில் இருந்து முத்துக்குமார் மீட்கப் பட்டார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில், அதிகாரிகளும், பாஜக.வினரும் வெள்ளூருக்கு, முத்துக் குமாரை அழைத்து வந்தனர். அங்கு முத்துக்குமாருக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு நன்றி கூறினர்.அமைச்சர் முன்னிலையில் முத்துக்குமார் பாஜக வில் இணைந்தார். பாஜக மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

5 ஆயிரம் பேர் சிக்கி உள்ளனர் - தொடர்ந்து, முத்துக்குமார் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைனில் வந்த விளம்பரத்தை நம்பி தாய்லாந்து நாட்டுக்கு விஐபி விசா மூலம் சென்றேன். ஒரு நதியைக் கடந்து மியான்மர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எனது பாஸ்போர்ட், செல்போன் அனைத்தையும் வாங்கிக் கொண்டனர். படிப்புக்கு ஏற்ற வேலை என்று பொய் சொல்லி என்னைப் போல் ஏராளமானோரை இங்கு அழைத்து வந்துள்ளனர். அது ஒரு பெரிய இடம். அங்கு அனைத்து வசதிகளும் இருக்கும். ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அங்கு ஸ்கேம் வேலை கொடுக்கின்றனர்.

ரஷ்யா, ஈராக் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் போன் எண்களை டிக்டாக் மூலம் எடுத்து எங்களிடம் கொடுப்பார்கள். நாங்கள் ஒவ்வொருவரும் 20 பேரிடம் சாட் செய்ய வேண்டும். அவர்களை கிரிப்டோ கரன்ஸி மூலம் ரீசார்ஜ் செய்ய வைக்க வேண்டும். நிறுவனம் கொடுக்கும் இலக்கை முடிக்கவில்லை என்றால், பேட், வயர், இரும்பு போன்றவற்றால் கடுமையாக அடிக்கின்றனர். சிலருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கின்றனர்.

என்னைப்போல அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிக்கி உள்ளனர். ஆனால், அவர்கள் அனைவரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். நான் இருந்த இடத்தில் இந்தியர்கள் யாருமில்லை. நான் இருந்த இடத்தைப்போல் அங்கு 21 இடங்கள் இருக்கிறது என கூறுகின்றனர். என்னை மீட்டுக் கொண்டு வந்த மத்திய அரசுக்கும், பிரதமர் மோடி, மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த நாட்டில் எனது பெயர் பிரபலமாகும் அளவுக்கு பேசி என்னைமீட்க நமது தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய இடங்களில் இருந்து என்ன வேலை என்றாலும்,யாரும் நம்பி போக வேண்டாம். அப்படிச் சென்றால் அங்கிருந்து மீண்டு வருவது தெய்வச் செயல். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அங்கு ஸ்கேம் வேலை கொடுக்கின்றனர். ரஷ்யா, ஈராக் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் போன் எண்களை டிக்டாக் மூலம் எடுத்து எங்களிடம் கொடுப்பார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE