சென்னை: சென்னை வேளச்சேரியில் அரசுக்குச் சொந்தமாக 1,200 சதுரஅடி நிலம் உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான 1,200 சதுர அடி இடத்தை போலி ஆவணங்கள் மூலம் வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி மற்றும் அவரது மனைவி சுதா ஆகியோர் கடந்த 2021ம் ஆண்டு அபகரித்துவிட்டதாகவும், இதற்கு வேளச்சேரியின் அப்போதைய தாசில்தார் மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட் டது. நீதிமன்ற உத்தரவின் பேரில்லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அதிமுக பகுதி செயலாளர் மூர்த்தி, அவரது மனைவி சுதா ஆகியோர் அரசு இடத்தை அபகரித்திருப்பதும், அதற்கு அரசு அதிகாரிகளே துணை போய் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இந்த இடத்தின் பட்டாமாறுதல் உள்ளிட்ட பணிகளை 3 மணி நேரத்தில் செய்து, அதிகாரிகள் லஞ்சம் பெற்றிருப்பதும் உறுதியானது.
இதையடுத்து, வேளச்சேரி தாசில்தாராகப் பணியாற்றிய மணிசேகர் (43) (தற்போது அம்பத்தூர் சிறப்பு தாசில்தார்-2 ஆக உள்ளார்), சர்வே துணை ஆய்வாளராகப் பணியாற்றிய லோகநாதன் (37) (தற்போது கோவைமாவட்டம் சூலூரில் பணியாற்றுகிறார்), கள சர்வேயராகப் பணியாற்றிய சந்தோஷ்குமார் (37), (தற்போது மாம்பலம் சர்வே உதவி ஆய்வாளராக உள்ளார்), மூத்த வரைபடவாளராகப் பணியாற்றிய ஸ்ரீதேவி (46), வேளச்சேரி ஆண்டாள் நகர் விரிவாக்கம் 3-வது தெருவைச் சேர்ந்த அதிமுக பகுதிச் செயலாளர் எம்.ஏ.மூர்த்தி (46), அவரது மனைவி சுதா ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், வேளச்சேரி பரணி தெருவில் உள்ள சிறப்பு தாசில்தார் மணிசேகரின் வீடு,மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்தோஷ் குமாரின் வீடு, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஸ்ரீதேவி, அதிமுக பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தியின் வேளச்சேரி இல்லம் மற்றும் கோவை மாவட்டம் வடகு பாளையத்தில் உள்ள லோகநாதன் வீடு என 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி உள்ளனர்.
» சிறுவனை தாக்கியதாக வழக்கு - பாடகர் மனோ மகன்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன்
» கெட்டுப்போன பிரியாணி விற்பனை செய்த பிரபல கடைக்கு ‘சீல்’ - சென்னை அதிகாரிகள் அதிரடி