சிறுவனை தாக்கியதாக வழக்கு - பாடகர் மனோ மகன்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன்

By KU BUREAU

சென்னை: சிறுவனை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் பாடகர் மனோவின் மகன்களுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்.10-ம் தேதி இரவு வளசரவாக்கம் பகுதி ஸ்ரீதேவிகுப்பம் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் பாடகர் மனோவின் மகன்களான ஷாகிர் பாபு மற்றும் முகமது ரஃபி ஆகிய இருவரும் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த சிறுவன் ஒருவனை மனோவின் மகன்களும் அவர்களது நண்பர்களும் சேர்ந்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக, பாடகர் மனோவின் மகன்கள் ஷாகிர் பாபு, முகம்மது ரஃபி, அவர்களது நண்பர்களான விக்னேஷ், தர்மா ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மனோவின் மகன்கள் இருவரும் தலைமறைவான நிலையில் விக்னேஷ், தர்மா ஆகியோரை போலீ ஸார் கைது செய்தனர். இதனிடையே, தனது மகன்களை சிலர் தாக்கியதாக மனோவின் மனைவிபுகார் தெரிவித்தார். அதன்பின், மனோவின் மகன்களை இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் சேர்ந்து உருட்டுக் கட்டை மற்றும் கற்களால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில் தாக்குதல் வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் மனோவின் மகன்கள் இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதி பி.தனபால் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் சரஸ்வதி முத்தையா ஆஜராகி, இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, இருவரும் ஒரு மாதத்துக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE