உடுமலையில் முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கைது - 32 சவரன் நகை மீட்பு

By எம்.நாகராஜன்

உடுமலை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முகமூடி அணிந்து 97 சவரன் தங்க நகை, ரூ.8.7 லட்சம் ரொக்கம், 5 இரு சக்கர வாகனங்களை கொள்ளையடித்து சென்ற 4 குற்றவாளிகளை உடுமலையில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்தது. அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில் மட்டும் 16 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு 45 சவரன் தங்க நகை, ரூ.3.22 லட்சம் ரொக்கம், இரு சக்கர வாகனங்கள் 2, வெள்ளி, வெங்கல பொருட்கள் முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.

இது தொடர்பாக உடுமலையில் 6, தாராபுரத்தில் 4, காங்கயம் காவல் நிலையத்தில் 6 என 16 வழக்குகள் பதிவானது. திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்றது.

மீட்கப்பட்ட நகைகள்

இதில் சத்தீஸ்கர் மாநிலம், பாஸ்டர், சத்ரபதி சிவாஜி ஜெகதல்பூர், தீட்கர கோட்டையைச் சேர்ந்த முருகன் சிவகுரு (45), கள்ளக்குறிச்சி, சின்னசேலம், அம்மையாகரம் பகுதியைச் சேர்ந்த ராஜா (40), தியாடுர்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (34), சித்தாலூர், பனைங்கல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் (55) ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடுமலையில் இன்று வாகன சோதனையின் போது பிடிபட்ட அவர்களிடமிருந்து 32 சவரன் தங்க நகை, இரு சக்கர வாகனங்கள் 2, குற்றத்துக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “பிடிபட்ட நபர்கள் மீது ஏற்கெனவே திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் 6 வழக்குகள் உட்பட இவர்கள் மீது இதுவரை 25 வழக்குகளில் உள்ளது. அதில் 97 சவரன் தங்க நகைகள், ரூ.8.71 லட்சம், 5 இரு சக்கர வாகனங்களை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

பிற மாவட்ட போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 பேரையும் நீதிமன்ற காவலுக்கு பிறகு நீதிமன்ற அனுமதியுடம் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்படும். அப்போது கூடுதல் விவரங்கள் தெரியவரலாம்” என்று போலீஸார் தெரிவித்தனர். தனிப்படை போலீஸாருக்கு காவல் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE