குளித்தலை அருகே 2 மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய்: குடும்பத் தகராறில் விபரீதம்

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: குளித்தலை அருகே, குடும்பத் தகராறில் 2 மகன்களுடன் தாய் கிணற்றில் குதித்துள்ளார். இதில் அவரும் அவரும் அவரது இளைய மகனும் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், 2 மணி நேரம் கயிற்றைப் பிடித்துக் கொண்டு தொங்கிய மூத்த மகன் உயிருடன் மீட்கப்பட்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள சுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் அருண் (32). இவரது மனைவி லட்சுமி (29). இவர்களுக்கு தர்ஷன் (6), நிஷாந்த் (4) என இரு ஆண் குழந்தைகள். குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன் - மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் லட்சுமி தனது இரண்டு மகன்களுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சுக்காம்பட்டியில் மகன்களுடன் தாய் குதித்த் கிணற்றை சுற்றி திரண்டிருந்த ஊர் மக்கள்

இதில், லட்சுமியும், அவரது இளைய மகன் நிஷாந்தும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் தர்ஷன் மட்டும் கிணற்றில் தொங்கிய கயிறை பிடித்துக் கொண்டு கத்திக் கொண்டே இருந்துள்ளார். சுமார் 2 மணி நேரம் சிறுவன் கத்திக்கொண்டிருந்த நிலையில் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் கிணற்றுக்குள் கயிற்றைப் பிடித்துக்கொண்டு தர்ஷன் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கிணற்றுக்குள் இறங்கி சிறுவனை மீட்டு அவரை இனுங்கூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சுக்காம்பட்டியில் மகன்களுடன் தாய் குதித்த் கிணற்றை சுற்றி திரண்டிருந்த ஊர் மக்கள்

சிறுவன் தர்ஷன் அளித்த தகவலின் பேரில் லட்சுமியும், நிஷாந்தும் கிணற்றில் மூழ்கிய விஷயத்தை அறிந்துகொண்ட அக்கம் பக்கத்து மக்கள் இதுகுறித்து திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் சுமார் 2 மணி நேரம் தேடி லட்சுமி மற்றும் நிஷாந்தின் உடல்களை மீட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சுக்காம்பட்டியில் கிணற்றில் இருந்து சிறுவனை சடலமாக மீட்கும் தீயணைப்பு வீரர்கள்.

இந்தச் சம்பவம் குறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பச் சண்டையில் தாய் தனது பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

>> தற்கொலை எதற்கும் தீர்வல்ல. தற்கொலை எண்ணம் வந்தால் இலவச தொலைபேசி எண் ‘104’-ஐ தொடர்பு கொண்டு அந்த எண்ணத்தில் இருந்து விடைபெற ஆலோசனை பெறலாம்.


.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE