கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு - சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தல்!

By KU BUREAU

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என உண்மை கண்டறியும் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் சிலர் பாலியல் தொந்தவுரக்கு உள்ளாக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் மனிதம் அமைப்பினர் உண்மை கண்டறியும் குழுவை அமைத்தனர். இவர்களது அறிக்கையை நேற்று கிருஷ்ணகிரியில் வெளியிடப்பட்டது.

உண்மை கண்டறியும் குழு ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் வரவேற்றார். மனிதம் அமைப்பின் மாநில தலைவர் ரமேஷ்பாபு, பழங்குடியின மக்கள் சங்க மாநில தலைவர் டில்லிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி தலைமை வகித்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புகாருக்கு உள்ளான பள்ளி 1982 முதல் செயல்பட்டு வருகிறது. 800 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கு முன்பு அங்கு என்சிசி வகுப்புகள் நடைபெறவில்லை. தற்போது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதாகி, உயிரிழந்துள்ள சிவராமன் எந்த அனுமதியும் பெறாமல் முகாமினை நடத்தியுள்ளார்.

மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தகவல்களை சக மாணவர்களிடம் பகிர்ந்த ஒரு மாணவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் ஆகியோரிடமும் விசாரித்தோம். புகாரில் சிக்கி உயிரிழந்த சிவராமன், முகாம் நடத்திய அனைத்து பள்ளிகளிலும் விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இச்சம்பவத்தில்,

சிவராமன் மட்டும் குற்றவாளியா. என்சிசி போலி முகாம் நிறைவு விழாவில் பரிசு வழங்கிய காவல் துறை அதிகாரி யார். குறிப்பிட்ட ஒரு ஆசிரியையின் மகள் மட்டும் முகாமில் தங்காதது ஏன் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் நிலவி உள்ளன.

எனவே, இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி விரைந்து குற்ற அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எங்களது உண்மை கண்டறியும் குழு விசாரணையில் கிடைத்த தகவல்களையும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் தமிழக அரசுக்கு அறிக்கையாக சமர்பிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மனிதம் அமைப்பின் மாநில துணை குழு உறுப்பினர்கள் குணசேகரன், வழக்கறிஞர்கள் ராமர், பொன்ராம், சுதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், வட்ட செயலாளர் பெரியசாமி, நிர்வாகிகள் ராதா, ஆஞ்சலாமேரி, சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE