தகாத உறவைக் கண்டித்த பாஜக பிரமுகரான தனது கணவருக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அதன்பின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிங்கனோடி தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு நாயக்(38). பாஜக பிரமுகரான இவர், தாலுகா பஞ்சாயத்து போர்டு உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மனைவி சினேகா(26).
இவர்களது கிராமத்தில் கோயில் கோபுரம் கட்டும் பணிக்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலாளர்கள வந்திருந்தனர். இதில் ஒரு தொழிலாளருடன் சினேகாவிற்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தகாத உறவைக் கைவிடுமாறு தனது மனைவியிடம் வலியுறுத்தினார். அதையும் மீறி சினேகா, மகாராஷ்டிரா ஊழியரிடம் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
தனது மகிழ்ச்சிக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்து கட்ட சினேகா திட்டம் தீட்டியுள்ளார். அதற்கு கணவரின் குடிப்பழக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த முடிவு செய்தார். அதன்படி ராஜு நாயக் குடிக்கும் மதுவில் நேற்று இரவு தூக்க மாத்திரைகளைப் போட்டுள்ளார். அதைக் குடித்த ராஜு நாயக் சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார்.
இதன் பின் அவரது கழுத்தை நெரித்து சினேகா கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த யாப்பல்தினி போலீஸார் விரைந்து வந்து ராஜு நாயக் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின் சினேகாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகாத உறவைக் கண்டித்த கணவரை மனைவியே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.