ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 25 பேர் மீது குண்டர் சட்டம்

By KU BUREAU

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

முதல்கட்டமாக மறைந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷின் தம்பி ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு(39), அவரது கூட்டாளிகளான குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். தனது சகோதரர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டியதாக பொன்னை பாலு வாக்குமூலத்தில் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

மேலும், கொலையின் பின்னணியில் இருந்ததாக, வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் என திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ரவுடிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்களில் பொன்னை பாலு உட்பட 10 பேர் கடந்த 7-ம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை ஹரிகரன்(27), திருவல்லிக்கேணி மலர்கொடி(49), திருநின்றவூர் சதீஷ்குமார்(31), திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஹரிஹரன்(37), புளியந்தோப்பு அஞ்சலை(51), சென்னை காமராஜர் சாலை சிவா(35), பெரம்பூர் பிரதீப்(28), கோடம்பாக்கம் முகிலன்(32), அதே பகுதி விஜயகுமார் என்ற விஜய்(21), விக்னேஷ் என்ற அப்பு(27), ாஜேஷ்(40), செந்தில்குமார்(27), வியாசர்பாடி அஸ்வத்தாமன்(31), ரவுடி பொன்னை பாலு மனைவி ராணிப்பேட்டை பொற்கொடி(40), கே.கே.நகர் கோபி(23) ஆகிய மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், வேலூர் சிறையில் ஆயுள் சிறைக் கைதியாக உள்ள ரவுடி நாகேந்திரன், கடந்த ஜூலை 14-ல் போலீஸாரின் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் தவிர மீதம் உள்ள அனைவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் காவல் ஆணையர் அருண் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE