சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரில் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ஏற்கெனவே இவ்வழக்கில் கைதான 10 மீது குண்டர் சட்டம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது..
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன், அவரது தந்தையான சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி மற்றும் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. அதே சமயம் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் ரவுடிகளான சீசிங் ராஜா மற்றும் சம்போ செந்திலை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
» வங்கதேசத்தை 149 ரன்களில் சுருட்டியது இந்தியா - டெஸ்ட் போட்டியில் தெறிக்கவிட்ட பும்ரா!
» ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா; ஹைலைட்ஸ் என்னென்ன?
இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஹரிஹரன், மலர் கொடி, சதீஸ்குமார், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தமன், பொற்கொடி, ராஜேஸ், குமார், செந்தில்குமார், கோபி என 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. முன்னதாக, பொன்னை பாலு, அருள், ராமு மற்றும் திருமலை உள்ளிட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க பெருநகர் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டிருந்தார். இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.