கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு: இரு மாணவிகளுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதிகள் அறிவுரை

By KU BUREAU

சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு தலா ரூ. 5 லட்சமும், எஞ்சிய 21 மாணவிகளுக்கு தலா ரூ. 1 லட்சமும் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகி இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட 23 மாணவிகள் உள்பட 219 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளி நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்தி வருவதாகவும், போலியாக என்சிசி முகாம் நடத்திய மற்ற பள்ளிகளுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை, என தெரிவித்தனர்.

அதையடுத்து நீதிபதிகள், சட்டப்பணிகள் ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகும் போலீஸார் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என கருத்து தெரிவித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கு தலா ரூ. 5 லட்சமும், எஞ்சிய 21 மாணவிகளுக்கு தலா ரூ. 1 லட்சமும் இழப்பீடாக இரு வாரங்களில் வழங்க அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த தொகையை சம்பந்தப்பட்ட பள்ளியிடமிருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டனர்.

மேலும், இந்த பாலியல் வழக்கின் தற்போதைய நிலை, கைதான சிவராமன் மரணம் தொடர்பான விசாரணை நிலை ஆகியவை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை இரு வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர். இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட பள்ளியிடமிருந்து வசூலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE