இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்று பயிற்சியின்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் கருடா மையம் அமைந்துள்ளது. இங்கிருந்து போர்க்கப்பல்கள் மற்றும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். நேற்று மாலை 5 மணி அளவில் வழக்கமான சோதனைக்காக ஆளில்லா விமானம் ஒன்று இயக்கப்பட்டது.
கண்காணிப்பு பணியை முடித்துக் கொண்டு மீண்டும் கடற்கரை தளத்துக்கு திரும்பி கொண்டு இருந்த ஆளில்லா விமானம், ஒரு கிலோமீட்டர் தொலைவில் திடீரென கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்கு உள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகளோ, உடமை இழப்புகளோ ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படை அதிகாரிகள் ,விபத்திற்குள்ளான ஆளில்லா விமானத்தின் பாகங்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து விமானம் விபத்திற்குள்ளானது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடற்படை தளம் கடந்த மார்ச் 11-ம் தேதி தனது 70 ஆண்டு நிறைவை கொண்டாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.