செங்கல்பட்டு | வீட்டு வாசலில் குடிபோதையில் தூங்கியவர் அம்மிக்கல்லால் அடித்துக் கொலை

By பெ.ஜேம்ஸ் குமார்

செங்கல்பட்டு: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் வீட்டுவாசலில் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்தவர் தலையில் அம்மிக் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டார். கஞ்சா விற்பது குறித்து போலீஸாருக்கு துப்புக் கொடுத்ததால் இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம், எழில் நகர், 41-வது பிளாக்கை சேர்ந்தவர் கலைவாணன் (25). இவரது மனைவி சவுந்தர்யா. இருவரும் மீன் கடையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கலைவாணன் புதன்கிழமை இரவு தான் குடியிருக்கும் மூன்றாவது மாடியின் வீட்டு வாசலில் குடிபோதையில் படுத்து உறங்கியிருக்கிறார். இந்நிலையில், இரவு 11.50 மணி அளவில் பார்த்த போது கலைவாணன் தலைநசுங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது அருகில் அம்மிக்கல் ஒன்றும் கிடந்துள்ளது.

சம்பவம் குறித்த தகவலின் பேரில் பெரும்பாக்கம் போலீஸார் அங்கு சென்று கலைவாணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக கலைவாணன் மனைவி சவுந்தர்யா பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதில், தனது கணவர் நேற்று இரவு தனது வீட்டு வாசலில் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் அப்போது, அவருக்கு வேண்டாத நபர்கள் அதே மாடியில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மூன்று மாதத்திற்கு முன் கலைவாணனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரளா என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சரளா கலைவாணனை தகாத வார்த்தைகளால் பேச, பதிலுக்கு கலைவாணனும் சரளாவை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் சரளா மகன் வசந்த் (21) மற்றும் உறவினர்கள் கலைவாணி, தமிழ், சந்தோஷ் என்கிற வெள்ளை சந்தோஷ், அருண் உள்பட ஐந்து பேரை போலீஸார் தேடி வருகிறார்கள். மேலும், கொலையான கலைவணன் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதனிடையே, கஞ்சா விற்பது தொடர்பாக கலைவாணன் போலீசுக்கு துப்புக் கொடுத்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் பெரும்பாக்கத்தில் 13 ரவுடிகளின் வீடுகளில் சுமார் 200 போலீஸார் போதைப் பொருள் பதுக்கல் குறித்து சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE