கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மகிழ்ச்சி மறைவதற்குள் சில மணி நேரங்களிலேயே பாம்பு கடித்து மாணவர் உயிரிழந்த சோகச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள தும்கூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்தவர் அதித் பாலகிருஷ்ணன்(21). இவர் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர். கடந்த 29-ம் தேதி மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
அப்போது அதித் பாலகிருஷ்ணன் பட்டம் பெற்றுவிட்டு, தான் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் அவரது தாய் மற்றும் உறவினர்களும் உடனிருந்தனர். வீட்டின் அருகில் வாகன நிறுத்தப் பகுதியில் சென்றபோது, அதித் பாலகிருஷ்ணனை பாம்பு கடித்துள்ளது. ஆனால் இதனை அவரோ, உறவினரோ அறியவில்லை. இந்நிலையில் வீட்டுக்குச் சென்றதும் அதித் பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அதித் பாலகிருஷ்ணனை, அவரது உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனையின்போது தான் அவரது உடலில் பாம்பு கடித்துள்ள அடையாளம் இருந்தது கண்டறியப்பட்டு, அவரது இறப்புக்கான காரணம் தெரிந்தது. மேலும், மிக அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்பு, அதித் பாலகிருஷ்ணனை கடித்தது, பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
அதித் பாலகிருஷ்ணன் பட்டம் பெற்ற விழாவில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், மாநில அமைச்சர் ஜி.பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. பாம்பு கடித்து மருத்துவ மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தும்கூரு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டம் பெற்ற சில மணி நேரங்களில் பாம்பு கடித்து மருத்துவக் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!
பரபரப்பான டி20 கிரிக்கெட்... தொடரை கைப்பற்றுமா இந்தியா?
கனமழை: சென்னை முழுவதும் பூங்காக்களை மூட உத்தரவு!
இன்று முதல் நடைமுறைக்கு வந்தது... பத்திரப்பதிவு கட்டணத்தில் மாற்றம்!