‘அதிக வேலைப்பளுவால் என் 26 வயது மகள் உயிரிழந்தாள்’ எர்ன்ஸ்ட்& யங் நிறுவனத்துக்கு தாயார் உருக்கமான கடிதம்

By KU BUREAU

கொச்சின்: முன்னணி கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றான எர்ன்ஸ்ட்& யங் (EY Pune) நிறுவனத்தில் பணிபுரிந்த 26 வயது பெண், வேலைக்குச் சேர்ந்த நான்கு மாதங்களிலேயே பணி அழுத்தம் காரணமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு அவரது தாயார் அனிதா அகஸ்டின் நெஞ்சை உலுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த பட்டயக் கணக்காளரான அன்னா செபாஸ்டியன் பேராயில், மார்ச் மாதம் எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அதன்பின்னர் நான்கு மாதங்களில் நிறுவனத்தில் மிக அதிக பணிச்சுமை காரணமாக உயிரிழந்தார் என அவரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார்

இது குறித்து இஒய் நிறுவனத்தின் இந்திய தலைவர் ராஜீவ் மேமானிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ள அனிதா அகஸ்டின், ‘பேராயில் 2023 இல் சிஏ (CA) தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் மார்ச் 2024 இல் இஒய் புனே நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இது அவளுடைய முதல் வேலை என்பதால், அவள் தன்மீதான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய அயராது உழைத்தாள். ஆனால் அந்த முயற்சி அவளது உடல், மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வேலைக்கு சேர்ந்த உடனேயே அவர் கவலை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தை அனுபவிக்கத் தொடங்கினார். ஆனால் கடின உழைப்பும் விடாமுயற்சியும் வெற்றிக்கான பாதை என்று நம்பி தொடர்ந்து உழைத்தாள்.

நிறுவனத்தில் இந்தக் குறிப்பிட்ட குழுவில் அன்னா சேர்ந்தபோது, ​​அதிகமான பணிச்சுமை காரணமாக பல ஊழியர்கள் ராஜினாமா செய்ததாக அவரிடம் கூறப்பட்டது. ஆனால் குழு மேலாளர் அவரிடம், 'அன்னா, நீங்கள் எங்கள் அணியைப் பற்றி அனைவரின் கருத்தையும் மாற்ற வேண்டும் என்று கூறினார். அதற்கு அவள் தன் உயிரைக் கொடுப்பாள் என்பதை உணரவில்லை.

அவரது மேலாளர் அடிக்கடி கிரிக்கெட் போட்டிகளின் போது கூட்டங்களை மாற்றியமைப்பார். நாள் முடிவில்தான் அவருக்கான வேலையை ஒதுக்குவார், இது அவரது மன அழுத்தத்தை அதிகரித்தது. அலுவலக விருந்தில், மூத்த தலைவர் கூட அவரின் மேலாளரின் கீழ் பணிபுரிவது அவளுக்கு கடினமான நேரம் என்று கேலி செய்தாள். துரதிர்ஷ்டவசமாக, இது அவளால் தப்பிக்க முடியாத உண்மையாகிவிட்டது’ என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘எனது மகள் இரவு வெகுநேரம் மற்றும் வார இறுதி நாட்களில் கூடவேலை செய்வார். அதிகாரப்பூர்வ வேலையைத் தாண்டி, வாய்மொழியாக ஒதுக்கப்பட்ட பணிகள் பற்றி அன்னா கவலையுடன் எங்களிடம் கூறினார். இதுபோன்ற பணிகளைச் செய்ய வேண்டாம் என்று நான் அவளிடம் கூறுவேன். ஆனால் மேனேஜர்கள் இடைவிடாமல் இரவு வரை வேலை வாங்கினார்கள், வார இறுதி நாட்களில் கூட மூச்சு விட வாய்ப்பில்லை.

ஒருமுறை அவரது உதவி மேலாளர் இரவில் அவளை அழைத்தார். அடுத்த நாள் காலைக்குள் முடிக்கப்பட வேண்டிய வேலையை ஒதுக்கினார். அவளுக்கு ஓய்வெடுக்கவோ அல்லது குணமடையவோ சிறிதும் நேரம் இல்லை. அவள் கவலைகளை தெரிவித்தபோது, ​​அதை அவர் பொருட்படுத்தவில்லை. நீங்கள் இரவில் வேலை செய்யலாம், நாங்கள் அனைவரும் அதைத்தான் செய்கிறோம் என்றார்.

அன்னா மிகவும் சோர்வுடன் தனது அறைக்குத் திரும்புவார், சில சமயங்களில் உடைகளை கூட மாற்றாமல் படுக்கையில் சரிந்து விழுவார். நாங்கள் அவளை பலமுறை எச்சரித்தோம், ஆனால் அவள் கற்றுக் கொள்ள விரும்பினாள். ஆனால் அவளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டது. அண்ணா ஒரு இளம் தொழில் நிபுணராக இருந்தார். எனவே நியாயமற்ற வேலைப்பளுவை நிராகரிக்க அனுபவமோ பயிற்சியோ இல்லை. எப்படிச் சொல்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.

மனித உரிமைகள் பற்றி பேசும் உங்கள் நிறுவனம் அதற்கு எதிராக செயல்படுகிறது. எனது மகளின் மரணம் நிறுவனத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியாக செயல்பட வேண்டும். உங்கள் நிறுவனத்தில் உள்ள பணி கலாச்சாரத்தைப் பற்றி சிந்திக்கவும், உங்கள் ஊழியர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஒய் புனே ஊழியர்கள் தனது மகளின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்கவில்லை என்ற் அதிர்ச்சி தகவலை அவர் கூறினார். அதில், ‘ எனது மகளின் இறுதி சடங்கில் உங்கள் நிறுவன ஊழியர்கள் கலந்து கொள்ளாதது, கடைசி மூச்சு வரை உங்கள் நிறுவனத்திற்கு அனைத்தையும் கொடுத்த ஒரு பணியாளருக்கு இது மிகவும் வேதனை அளிக்கிறது. அவரது இறுதிச் சடங்கிற்குப் பிறகு, நான் மேலாளரை அணுகினேன். அவளுடைய மேலாளர்கள் எந்தப் பதிலும் சொல்லவில்லை. மதிப்புகள் மற்றும் மனித உரிமைகள் பற்றிப் பேசும் ஒரு நிறுவனம், அவர்களின் இறுதித் தருணங்களில் இப்படியா நடந்துகொள்ளும்?

அன்னா செபாஸ்டியன் பேராயில் மரணத்திற்கான சரியான காரணம் தெளிவாக இல்லை என்றாலும், அவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு, "மார்பு சுருங்குதல்" இருப்பதாக கூறினார். நாங்கள் அவளை புனேவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவளது ஈசிஜி சாதாரணமாக இருந்தது. இதய நோய் நிபுணர் எங்களிடம் வந்து, அவளுக்கு போதுமான தூக்கம் இல்லை, மிகவும் தாமதமாக சாப்பிடுவதாகக் கூறினார். அவர் ஆன்டாசிட்களை பரிந்துரைத்தார். மற்றபடி எதுவும் தீவிரமாக இல்லை என்றார்.

நாங்கள் கொச்சியில் இருந்து அங்கே சென்றிருந்தாலும், நிறைய வேலை இருக்கிறது, லீவு கிடைக்காது என்று மருத்துவரைப் பார்த்துவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். அன்றிரவு, அவள் மீண்டும் தாமதமாக அறைக்கு திரும்பினாள். அவரது பட்டமளிப்பு நாளான ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமை, அவர் காலையில் எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால் அவர் அன்றும் மதியம் வரை வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தார், நாங்கள் தாமதமாக பட்டமளிப்பு விழா நடக்கும் இடத்தை அடைந்தோம். இதனையடுத்து சில நாட்களில் அவளின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஜூலை 20 அன்று இறந்தார்’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த கடிதம் குறித்து இஒய் நிறுவனத்திடமிருந்து உடனடியாக பதில் எதுவும் வரவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE